புதன், 25 டிசம்பர், 2019

இன்றோடு ஓய்கிறது உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம்...!

Authors
Image
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரம் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. இன்று மாலையுடன் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைவதால் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்குவேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். வீதி வீதியாக சென்று நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு திரட்டினர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில்  சென்று அதிமுக வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். இதில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி பஞ்சாயத்து 4 வது வார்டில் அதிமுக - பாஜக கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. 4வது வார்டில் போட்டியிட அதிமுக வேட்பாளர் ஆனந்த் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அதே வார்டில் முத்துராமன் என்பவர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றார். இதேபோல் திமுக - மதிமுக கட்சிகளும் ஒரே வார்டில் எதிர்த்து போட்டியிடுகின்றன.

credit ns7.tv