திங்கள், 23 டிசம்பர், 2019

போலீஸ் உத்தரவை மீறி திமுக பேரணி நடத்தினால் வீடியோ பதிவு செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு..!

Image
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போலீஸ் உத்தரவை மீறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போலீஸ் உத்தரவை மீறி போராட்டம் நடத்தினால் அந்த போராட்டத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக அதன் கூட்டணி கடசிகளுடன் இணைந்து பேரணி நடத்தயிருப்பதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் பேரணியில் பங்கேற்குமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் கூட்டணியில் இல்லாத மக்கள் நீதி மய்யம் கட்சி போன்ற கட்சிகளுக்கும், சிறு அமைப்புகளுக்கும் திமுக அழைப்புவிடுத்தது. ஆனால் மக்கள் நீதிமய்யம் முதலில் பேரணியில் பங்கேற்க போவதாக அறிவித்துவிட்டு பின்னர் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்கியது. பின்னர் பேரணி நடத்துவதற்காக முறையான அனுமதி கேட்டு காவல்துறையை நாடியது திமுக. ஆனால் பேரணி குறித்த காவல்துறையினரின் கேள்விகளுக்கு சரியான பதில்கள் கூறப்படவில்லை எனக்கூறி காவல்துறை அனுமதியை மறுத்தது. 
இந்நிலையில் மக்கள் மன்ற தலைவர் வாராகி என்பவர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுகவின் பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிபந்தனைகளை மீறி போராட்டம் நடத்தினால் டிரோன் மூலம் வீடியோ பதிவு செய்தால் அது முக்கியமான சாட்சியாக அமையும் என்றனர். மேலும் ஜனநாயகத்தில் போராட்டங்களை தடுக்க முடியாது என்ற போதும், காவல் துறையின் கேள்விகளுக்கு அரசியல் கட்சி பதிலளிக்காதது அபாயகரமானது எனவும் தெரிவித்தனர். பின்னர், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனவும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், காவல் துறை உத்தரவை மீறி பேரணி நடத்தினால் அதை வீடியோ பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த மனுவுக்கு எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., காவல் ஆணையர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் பேரணிக்கு அனுமதி கேட்டு திமுக நீதிமன்றத்தை நாடாததால், பேரணிக்கு அனுமதியளிப்பது குறித்து எந்த உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம்  பிறப்பிக்கவில்லை.
credit ns7.tv