சனி, 21 டிசம்பர், 2019

தேசிய கீதம் பாடி போராட்டக்காரர்களை கலைத்த காவலர்...!

Image
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை சமாதானம் செய்யும் முயற்சியாக, பெங்களூருவை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், தேசிய கீதம் பாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, டெல்லி, பெங்களூரு, சென்னை, லக்னோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி, மாணவர்கள், பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
அதனைத் தொடர்ந்து, பல முக்கிய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை கலைக்க, காவலர் ஒருவர் வினோத முயற்சியை கையாண்டுள்ளார். போராட்டக்காரர்கள் மத்தியில் சிறிது நேரம் உரையாற்றிவிட்டு, இறுதியில் தேசிய கீதத்தை பாடியுள்ளார் அந்த காவலர். தேசிய கீதம் முடிந்ததும் போராட்டக்காரர்களும் அங்கிருந்து கலைந்துசென்றுள்ளனர்.
அது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பெரும்பாலானோரால் பகிரப்பட்டுவருகிறது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, பல்வேறு இடங்களில் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசிவரும் நிலையில் பெங்களூரு காவலரின் இந்த செயல் பாராட்டைப் பெற்றுவருகிறது. 

credit ns7.tv