ஐக்கிய ஜனதா தளத்தின் துணை தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரஷாந்த் கிஷோர், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதற்காக அமைதி காக்க வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகாரைச் சேர்ந்தவரான பிரஷாந்த் கிஷோர், தமிழகத்தில் மிகவும் பரிட்சயமானவரே. தேர்தல் வியூகத்திற்கு பெயர் போனவரான இவரை, தங்களுக்காக பணியாற்ற வேண்டுமென அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்து வருகின்றன.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரஷாந்த் கிஷோர் அளித்துள்ள பேட்டியில் தற்போது நாட்டின் மிகவும் பேசப்படும் விவகாரமாக மாறியிருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேசியுள்ளார்.
பிரஷாந்த் கிஷோர் பேசுகையில், “தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிடாதது ஏன் எனவும் போராட்டங்கள், தர்ணாக்களில் ஈடுபடுவது ஒருபுறம் இருந்தாலும் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால் தெளிவு பிறந்திருக்கும் இருப்பினும் சோனியா NRC தொடர்பாக அறிக்கை வெளியிடாதது ஏன் என்பது புரியவில்லை என்றும் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்று தாங்கள் ஆளும் முதல்வர்களை அறிவிக்கக் கோரி காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் காரியக் கமிட்டியும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
10க்கும் மேற்பட்ட மாநில முதல்வர்கள் NRCயை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் காரியக் கமிட்டிக்கே அதிக அதிகாரம் உள்ளது, மாநில முதல்வர்களுக்கு முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் கிடையாது.
குடியுரிமை திருத்த சட்டம் 2003ல் உருவாக்கப்பட்டது; 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தது காங்கிரஸ், இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்றால் அதனை திருத்த காங்கிரஸுக்கு வாய்ப்பு இருந்தது என்று கூறினார்.
மேலும் தேசிய மக்கள் பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் தொடர்பு கிடையாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதில் உடன்பாடு இல்லை என்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதல் படியே மக்கள் தொகை பதிவேடு தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
credit ns7.tv