கர்நாடக மாநிலத்தில் 144 தடை உத்தரவை மீறியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், கர்நாடகா மாநிலத்தில் 144 தடை உத்தரவை மீறி மைசூரு மற்றும் கலாபராகி பகுதிகளில் இடதுசாரிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸாரின் எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கைது செய்தனர். பெண்கள் என்றும் பாராமல் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு டவுன் ஹாலில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாத்மா காந்தியின் போஸ்டரை கையில் வைத்ததற்காகவும், இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து கருத்து தெரிவித்ததற்காகவும் போலீசார் தம்மை கைது செய்ததாக குற்றம்சாட்டினார்.
credit ns7.tv