சனி, 21 டிசம்பர், 2019

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி...!


Image
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீண்டும் கலந்து கொண்டார்.
போராட்டம்... வன்முறை... என தகிக்கிறது இந்தியா.... காரணம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம்... இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. 
டெல்லி ஜூம்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பீம் ராணுவ அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத் தலைமையில் நேற்று பேரணி நடைபெற்றது. ஜூம்மா தொழுகைக்கு வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இதில் கலந்து கொண்டனர். 
போலீசார் அனுமதியை மீறி ஜந்தர் மந்தரை நோக்கி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு பேரணி சென்றனர் போராட்டக்காரர்கள். இந்த நிலையில் அவர்களின் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. அப்போது அங்கிருந்த வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதனை அடுத்து தடியடி நடத்தி காவல்துறையினர் அவர்களை கலைத்தனர். 
இதே போல், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களும், காவல்துறையினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால், போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர் காவல்துறையினர். 
இந்த வன்முறை தொடர்பாக சமாஜ்வாதி எம்.பி., சஃபிகுர் ரஹ்மான் உள்பட 17 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தப்பிரதேசத்தில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நீடிக்கும் போராட்டங்களில் 5 பேர் பலியானதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 
இதனிடையே, குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி இந்தியா கேட் பகுதியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்றிரவு மீண்டும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஏழை, எளிய மக்களை குறி வைத்து குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். 

credit ns7.tv