தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஜனவரி இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 27ம் தேதி நடந்த தேர்தலில், 76.19 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்தநிலையில், 158 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாவது கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்வதற்காக சுமார் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
கடைசி நேரத்தில் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அமைதியாக நடந்த இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 77 புள்ளி ஏழு மூன்று சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 30 வாக்குச்சாவடிகளில் 72.7 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டிகள், 315 மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டன. ஜனவரி இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
credit ns7.tv