வியாழன், 26 டிசம்பர், 2019

வானியல் அதிசயங்களில் ஒன்றான சூரிய கிரகணம் நிகழத்தொடங்கியது...!

credit ns7.tv
Image
வானியல் அதியங்களில் ஒன்றான சூரிய கிரகணம் நிகழத்தொடங்கியுள்ளது. கிரகணத்தை காண, அறிவியல் மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது, அதன் நிழல், பூமியின் மீது விழும் நிகழ்வே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. ரிங் ஆப் பயர் எனும் வளைய வடிவ சூரிய கிரகணம் வானில் இன்று நிகழவுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிசய நிகழ்வாக பார்க்கப்படும் இந்த சூரிய கிரகணம், சரியாக காலை 8.06 மணி முதல் 11.14 மணிவரை, சுமார் மூன்றரை மணி நேரம் வரை தென்படும். 
துல்லிய வளைய கிரகணம் காலை 9.31 முதல் 9.33 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் கேரளா மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தின் தென் பகுதி வரை தெளிவாக பார்க்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
குறிப்பாக, உதகை, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கருர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டத்தின் மத்திய பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் முழுமையான வளைய வடிவ சூரிய கிரகணம் நிகழும் எனவும், இதனை காண பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 
இந்த கிரகணத்தின் போது, அபாயகரமான கதிர்கள் ஏதும் வெளியேற வாய்ப்பில்லாததால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் எனவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளது. 
சூரிய கிரகணத்தையொட்டி, தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் காலை 6 மணி முதல் 12 மணி வரை நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கிரகணத்தை காண, அறிவியல் மையங்களில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.