திங்கள், 23 டிசம்பர், 2019

ஜார்க்கண்டில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி...!

Image
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் தருவாயில் உள்ளது.
81 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில், நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் ஆளும் பாஜவுக்கும், காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. 
காலை 11 மணி வரை எண்ணப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 40க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 27 இடங்களிலும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா 4 இடங்களிலும், ஏஜேஎஸ்யு கட்சி 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதர கட்சிகள் 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. ஜார்க்கண்டில் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதால், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், போட்டியிடும் பர்ஹைய்த் தொகுதியில் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். மொத்தம் 43 தொகுதிகளில் போட்டியிடும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி சுமார் 25 தொகுதிகளில் பெரும்பான்மை பொற்று பலம் வாய்ந்த கட்சியாக மாறியுள்ளது. 
இதே போல், ஆளும் பாஜகவின் முதல்வரான ரகுபர் தாஸ், தாம் போட்டியிடும் கிழக்கு ஜாம்ஷத்பூர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருவதால், ஜார்க்கண்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

credit ns7.tv