செவ்வாய், 17 டிசம்பர், 2019

குடியுரிமை சட்ட திருத்தத்தை பாஜகவின் நிர்பந்தத்தால் விருப்பமில்லாமல் ஆதரித்ததா அதிமுக?


Image
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தால் இந்திய தலைநகர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வட கிழக்கு மாநிலங்களில் காத்திரமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதுகூட டெல்லி மாணவர்கள் அமைதி வழியில்தான் போராடிக் கொண்டிருந்தனர். 
இந்த சூழலில் நேற்று ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது பொதுமக்களும் திரள கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனையடுத்து திடீரென போலீசார் மாணவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் கற்களைக் கொண்டு தாக்கியதாலேயே தடியடி நடத்தியதாக விளக்கமும் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. 
மூன்று பேருந்துகளை போராட்டக்காரர்கள் கொளுத்திவிட்டதாக தகவல் பரவிய சிறிது நேரத்திலேயே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வாகனங்களில் இருந்த தேன்கூட்டை தமிழக போலீஸ் கலைத்தது போல டெல்லி போலீஸ் பேருந்தில் இருக்கும் தேன்கூட்டை கலைக்கும் வீடியோ வெளியானது. அந்த வீடியோ வைரலாவதற்கு முன்பே பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து போராடிய மாணவர்களை , ஆண் பெண் பேதமின்றி கடுமையாக போலீஸ் தாக்கியதாக புகைப்படங்களும் வீடியோக்களும் வெளிவந்தன. அதன் தொடர்ச்சியாக டெல்லி பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் பற்றிக் கொண்டது போராட்டம். அதன் தொடர்ச்சியாக பீகார், மேற்கு வங்கம் என வடமாநிலங்கள் முழுக்க போராட்டத் தீ பரவத் தொடங்கியது. 
இதற்கிடையில் ஏற்கனவே நாளை தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த ஸ்டாலின் ஏன் தமிழர்கள் போராடவேண்டும் என பிரத்யேகமாக வீடியோ வடியோவையும் வெளியிட்டிருக்கிறார். அதே போல வடமாநிலங்களில் நடத்தப்படுவது போல வலுவான போராட்டங்களை தமிழகம் நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறியிருக்கிறார். இந்த இடத்தில் திமுக கூட்டணியினர் தமிழகத்திலும் உரிமை பறிக்கப்படுகிறது என போராட அழைக்கிறார்களா அல்லது பாஜக-அதிமுக அரசுகளுக்கு நெருக்கடி தர அழைக்கிறார்களா என்பதை கேட்கவேண்டியிருக்கிறது. 
அதுமட்டுமின்றி இரு அவையிலும் முழு ஆதரவை அதிமுக அளித்திருக்கும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூட்டணியின் கட்டாயத்தின் பேரிலே ஆதரித்தோம் என்று பேசியிருக்கிறார். அப்படியெனில் குடியுரிமை சட்ட திருத்தம் மனப்பூர்வமாக ஆதரிக்கப்படவேண்டியது அல்ல எனதான் கருதுகின்றதா அதிமுக என்கிற வினாவும் வருகிறது.
credit ns7.tv