சனி, 21 டிசம்பர், 2019

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு சோனியா காந்தி கண்டனம்..!


Image
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், மாணவர்கள் மற்றும் மக்களின் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பாஜக அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரசானது ஆழ்ந்த வருத்தத்தையும் அக்கறையும் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் பாஜகவின் பிரிவினைவாத கொள்கைகளுக்கும், மக்கள் விரோத செயல்களுக்கும் எதிராக நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் மற்றும் பல கல்வி நிறுவனங்களில் தன்னெழுச்சியாக போராட்டம் எழுந்துள்ளதாகவும் கூறினார். 
மேலும் ஜனநாயக நாட்டில் அரசின் தவறான முடிவுகளையும், கொள்கைகளையும் எதிர்த்து போராட மக்களுக்கு உரிமை உள்ளது எனவும், மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ய வேண்டியது அரசின் கடமை எனவும் கருத்து தெரிவித்துள்ளார். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் அதனை நசுக்கும் போக்கை ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
பாஜகவின் அடக்குமுறைகளை கண்டிப்பதோடு, மாணவர்களுக்கும், மக்களுக்கும் காங்கிரஸ் தோழமையை வெளிப்படுத்துவதாக கூறியிருக்கும் அவர், குடியுரிமை திருத்த சட்டமும், அடுத்ததாக கொண்டு வரப்படவுள்ள தேசிய குடியுரிமை பதிவேட்டு திட்டமும் இந்நாட்டில் உள்ள ஏழைகளையும், ஒடுக்கப்பட்டவர்களையும் அதிகம் பாதிக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் இதனால் மக்கள் தங்களது குடியுரிமையும், அவரகளின் முன்னோர்களின் குடியுரிமையும் நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 
இறுதியாக இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளையும், இந்திய அரசியலமைப்பையும் பாதுகாக்க இந்திய தேசிய காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

credit ns7.tv