திங்கள், 30 டிசம்பர், 2019

வட மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை!

Image
வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிரால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். டெல்லியில் 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், அங்கு ''ரெட் அலெர்ட்'' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், கடும் பனிமூட்டம் நிலவியது. பனிமூட்டத்தால் ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சாலையில் செல்லும் வாகனங்கள் தெளிவாக தெரியாததால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன. பனியின் தாக்கம் தொடருவதால், டெல்லிக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில், பல்வேறு பகுதிகளில் ஜனவரி 3ம் தேதி வரை மிகக்கடுமையான குளிர் நிலவும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாகவும், கிழக்கு திசை காற்றின் நிலையற்ற தன்மையின் காரணமாகவும், வரும் 31ம் தேதி முதல் ஜனவரி மூன்றாம் தேதி வரை, வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வீடில்லாத மக்கள் குளிரில் இருந்து தப்பிக்கும் வகையில், இரவு நேர குடில்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

credit ns7tv