வெள்ளி, 27 டிசம்பர், 2019

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் பட்டியலில் தமிழகம் 2ம் இடம்!

Image
இந்தியாவிலேயே குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
இந்தியாவிலேயே எந்தெந்த மாநிலங்களில் குழந்தைகள் பாலியல் ரீதியிலான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர் என்ற அறிக்கையை குழந்தைகளுக்கான அவசரகால சேவை மையமான Child Line வெளியிட்டுள்ளது. 
இதன்படி, 2019-ஆம் ஆண்டில் கேரளாவில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பாக சுமார் 1742 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கேரளாவிற்கு அடுத்த படியாக சுமார் 985 குழந்தைகள் பாலியல் வன்முறை புகார்கள் பதிவு செய்யப்பட்டு தமிழகம் இந்தப் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. 443 புகார்களோடு மகாராஷ்டிரா 3-ம் இடத்தில் உள்ளது. 
குழந்தைகளுக்கு ஏதேனும் வன்முறைகள் ஏற்பட்டாலோ, பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்பட்டாலோ அதுதொடர்பாக உடனடியாக புகாரளிக்க உதவும் வகையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன், Child Line “1098” என்ற திட்டம் இந்தியா முழுவதும் 522 மாவட்டங்களையும் 100 ரயில் நிலையங்களில் நடைமுறையில் உள்ளது. 
இதில் இந்தியா முழுக்க 2018-19ம் ஆண்டில் மட்டும் சுமார் 60 ஆயிரம் புகார்கள் அளிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 37 சதவீத புகார்களோடு குழந்தைத் திருமணங்கள் முதலிடத்தில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக குழந்தைகள் உடல் ரீதியிலான தன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக சுமார் 27 சதவீத புகார்கள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து 13% பாலியல் துஷ்பிரயோகம், உணர்ச்சிரீதியாக குழந்தைகளை துன்புறுத்தப்படுவதாக 12 சதவித புகார்களும், உடல்ரீதியாக தண்டனைகள் வழங்கி தன்புறுத்தப்படுவதாக சுமார் 4% புகார்களும் வந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது தொடர்பாக புகாரளிக்க பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டு வருவதால், அதிகமான மக்கள் புகார் அளிக்க தைரியமாக முன்வருவதாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களை உடனடியாக சுட்டுத்தள்ளினால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது குறைக்கப்படும் என்ற கோஷம் இந்தியா முழுக்க இப்போதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், தண்டனைகள் கடுமையானாலும், பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அதிலும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்க அரசு மேலும் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது
crime
credit ns7.tv