சனி, 21 டிசம்பர், 2019

பூட்டியிருக்கும் வீடுகளில் அடையாள குறியீடுகளை வரைந்து கொள்ளையடிக்கும் கும்பல்!

Image
பூட்டியிருக்கும் வீடுகளில் ரகசிய குறியீடுகளை வரைந்து, கொள்ளையடித்திடும் சம்பவங்கள் நாகை மாவட்டத்தில் அதிகரித்தள்ளது. இக்கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் எப்படி தங்கள் கொள்ளை திட்டத்தை நிறைவேற்றிடுகின்றனர் என்பது குறித்த முழுவிவரங்களை  தற்போது பார்போம்.
பகல் நேரத்தில் நோட்டமிடும் கொள்ளையர்கள், பூட்டிக்கிடக்கும் வீடுகளில் அடையாள குறியீடுகளை வரைந்து நிதானமாக கொள்ளையடித்திடும் துணிகர கொள்ளைகளை அரங்கேற்றி வருவது நாகையில் அதிகரித்து வருகிறது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வருபவர் இளமதி. இவரது கணவர் ஹரிராமன் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார்.  இவர்கள் இருவரும் பணி நிமித்தம் காரணமாக, காலையில் வீட்டை பூட்டி விட்டு செல்லும் இவர்கள்,  மாலையில் வீடு திரும்புவது வழக்கம்..
பகல் நேரங்களில் இவரது வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், தங்கள் குழுவிற்கு தகவல் அளிக்கும் வகையில் வீட்டின் முன்பு "Y" குறியீட்டை வரைந்துள்ளனர். பின்னர் கொள்ளை கும்பல், தங்கள் கொள்ளை திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.  பீரோவில் வைத்திருந்த  4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையர் திருடி சென்றுள்ளனர்.  மாலையில் வழக்கம் போல் வீட்டுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நிகழ்ந்துள்ளதை அறிந்து துணை வட்டாட்சியர் இளமதி, அதிர்ச்சி அடைந்தார். 
இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த வெளிப்பாளையம் போலீசார் கொள்ளையர்கள் குறித்து தடயவியல் சோதனை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பெங்களூரில் இருந்து களமிறங்கியுள்ள வெளிமாநில கொள்ளையர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவியுள்ளதாகவும், இவர்கள் பூட்டியிருக்கும் சில வீடுகளை நோட்டமிட்டு ஆள் இல்லை என்பதற்கு  Y என்ற அடையாள குறியீடும்,  ஆள் இருக்கும் வீடுகளில் X என்ற அடையாள குறியீட்டையும் பென்சிலால் வரைந்து, பட்டப் பகலிலேயே கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருவதும் தெரியவந்துள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டால் மட்டுமே இக்கொள்ளை சம்பவங்களை முற்றிலுமாக தடுக்கமுடியும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 
இக்கொள்ளையர்கள் நாகை பெருமாள்கீழ வீதியில் உள்ள அபார்ட்மெண்ட் குடியிருப்பு ஒன்றின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகளை களவாடிச் சென்றுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் நாகை பகுதியில் அதிகரித்து வரும் இக்கொள்ளை சம்பவங்களினால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
credit ns7.tv