கமல், ரஜினி ஆகியோரை பாஜக இயக்குவதாக, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் சித்தார்த்திடம் இருந்து, ரஜினிகாந்த் பாடம் கற்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தர முயற்சிப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுவது, இரட்டை நாக்கு பேச்சாக உள்ளது, என்றும் தமிமுன் அன்சாரி விமர்சித்தார்.
மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நடிகர்கள், ரஜினிகாந்த், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை பெரியமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன், நடிகர்கள், ரஜினிகாந்த், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர்களது வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், போராட்டம் நடத்துபவர்களை தனிமைப்படுத்தி சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தவே அர்பன் நக்சல் என்கிற வார்த்தையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
credit ns7.tv