நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கும், ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 2012 ஆம் ஆண்டு, பிசியோதெரபி படித்துவந்த மாணவி நிர்பயா, தன் ஆண் நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு, பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஓடும் பேருந்திலேயே ஒரு கும்பலால் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இந்த சம்பவத்தின் போது, நிர்பயாவின் நண்பரும் தாக்கப்பட்டார்.
மிகவும் மோசமாக காயமடைந்த மாணவி நிர்பயாவை சாலையோரம் அக்கும்பல் வீசிவிட்டுச் சென்றது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிர்பயா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி 13 நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார்.
நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பெரும் போராட்டங்களை நடத்தியதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் ஆகியோருடன், 17 வயது சிறார் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்தபோது, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதிமன்றம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என 2013 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.
கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடந்த விசாரணையில், பாலியல் வன்கொடுமையில் அவர்கள் ஈடுபட்டது உறுதியானதையடுத்து, சிறுவன் தவிர்த்த, பிற நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து 2013 செப்டம்பர் 13ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மரண தண்டனையை எதிர்த்து, மேல் முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 2014 மார்ச் 13ல் நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது.
டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை 2017 மே மாதம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும், குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவும், குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று நிர்பயாவின் தாயார் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகள் நான்குபேரையும் ஜனவரி 22ம் தேதி தூக்கிலிடுமாறு உத்தரவிட்டது. 4வது குற்றவாளியின் கருணை மனுவும் குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டதையடுத்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான வேலைகளில் திகார் சிறைத்துறை தீவிரமாக செயல்பட்டுவந்தது.
இந்நிலையில், 4 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதியான நிலையில், ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு அனைவரையும் தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுவதற்கான வேலைகள் தொடங்கியுள்ளது. எனினும், கருணை மனு மீது சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், ஏ.பி.சிங் “இந்த வழக்கின் தொடக்கத்திலிருந்தே ஊடகங்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் நெருக்கடி இருந்துவருகிறது; ஒன்றிரண்டு நாட்களில் நாங்கள் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் 5 மூத்த நீதிபதிகள் விசாரணை செய்வார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாகவும், இந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால், இது போன்ற குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்று நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் தெரிவித்துள்ளார்.
“எனது மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது. இந்த முடிவானது இந்திய மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்று நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கானது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதையடுத்து, நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற பரபரப்பு சூழ்நிலை உருவாகியுள்ளது.
credit ns7.tv