credit ns7.tv
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காரசார விவாதத்தின்போது ஏற்படும் கருத்து முரண்பாடுகளால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது வழக்கமான செயலாகும். சட்டமன்ற கூட்டத்தொடரின்போது தினமும் காலை 10 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கும். அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது அரசியல் கட்சி தலைவர்களோ மரணம் அடைந்திருந்தால் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்ட பின் அன்றைய நாளுக்கான சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கும். அப்போது ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏதேனும் தீர்மானத்தையோ அல்லது மக்கள் பிரச்சினை குறித்தோ விவாதத்திற்கு கொண்டுவருவார்கள், இதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் அதன் மீதான விவாதம் அவையின் உறுப்பினர்கள் முன்பாக விவாதிக்கப்படும்.
அப்படி ஏதேனும் தீர்மானத்தின் மீதோ, சட்டமுன் வரைவின் மீதோ அல்லது நாட்டில் நிகழ்ந்த ஏதேனும் பிரச்சினை குறித்தோ விவாதம் நடைபெறும். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை என்றாலோ, ஆளுங்கட்சியின் முடிவுக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலோ எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது வழக்கம். எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் இருந்து அடிக்கடி வெளிநடப்பு செய்வதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
ஆனால் உண்மையில், ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் விவாதம் நிகழும்போது, அந்த தலைப்புக் குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சியினருக்கு உடன்பாடு இல்லை என்றால் மட்டுமே சட்டமன்றத்திலிருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்வர். மேலும் அந்த குறிப்பிட்ட தலைப்புக் குறித்த விவாதம் நிறைவடைந்த பிறகு அவர்கள் மீண்டும் சட்டமன்றத்திற்குள் சென்று தொடர்ந்து சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வர்.
2020ம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று (06-01-2020) தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் திமுக உறுப்பினர்களும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இதைப்போல இன்று குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். ஆனால் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தனபால் கூறியதால் திமுக உறுப்பினர்கள் இன்றும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துவிட்டு மீண்டும் 11:20 மணிக்கு, திமுக உறுப்பினர்களும், மு.க.ஸ்டாலினும் மீண்டும் சட்டமன்ற நிகழ்வுகளில் மாலை வரை கலந்துகொண்டனர்.