ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்பதில் இருந்து 6 மணி நேரமாக வேலை நேரத்தை குறைத்து அறிவித்துள்ளது பின்லாந்து அரசு.
இனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் தான் வேலை, அதுவும் ஒரு நாளுக்கு 6 மணி நேரம் மட்டும் வேலை பார்த்தால் போதும். கேட்கும்போதே காதில் இன்பத்தேன் வந்து பாய்கிறதா? இந்த மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளவர் பின்லாந்து பிரதமர் சன்னா மரின்.
34 வயது நிரம்பிய சன்னா மரின், உலகின் மிக இளம் பிரதமராவார். அவரது அமைச்சரவையில் உள்ள 19 பேரில் 12 பேர் பெண்கள். அதிலும் நிதியமைச்சருக்கு 32 வயது தான். அத்துடன் பதவியேற்றது முதல் பல அதிரடிகளை அரங்கேற்றி வருகிறது அவரது அரசு. இந்த வரிசையில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இனி வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் சன்னா மரின்.
தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். நேசிப்பவர்களுக்காக அதிக நேரம் ஒதுக்கி, கலைநிகழ்ச்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்தினால் மக்களின் வாழ்க்கை அடுத்தகட்டத்தை நோக்கி நகரும். அந்த நம்பிக்கை தமக்கு உள்ளதாக கூறுகிறார் சன்னா மரின். இதன் காரணமாகவே தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதற்கான பரிசோதனை முயற்சிகளுக்கான காலத்தை ஏற்பாடு செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்வீடனிலும் இந்த முறை:
பின்லாந்தில் தற்போது 5 நாள்கள், 8 மணி நேர வேலை என்பது விதிமுறை. ஆனால், 8 மணி நேரம் வேலை செய்தும் அங்கு உற்பத்தி அதிகரிக்கவில்லை. அதே நேரம் அண்டை நாடான ஸ்வீடனில் கடந்த சில ஆண்டுகளாக சீரான அளவில் உற்பத்தி அதிகரித்து வருகிறது. காரணம் ஸ்வீடனில் ஒரு நாளுக்கு 6 மணிநேரம் மட்டுமே வேலை.
இந்தக் கோட்பாட்டை அவர்கள் நீண்ட நாள்களாகப் பின்பற்றி வருகின்றனர். இதனால் ஊழியர்கள் மன உளைச்சல் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், உற்பத்தியும் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக ஸ்வீடன் நாட்டின் வரி வருவாயும் அதிகரித்தது.
உற்பத்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் முயற்சி:
இந்த நடைமுறை பிரபல கார் நிறுவனமான டொயோட்டாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் சந்தோஷமாகவும் அதே சமயத்தில் அதிக உற்பத்தியையும் கொடுப்பதைக் டொயோட்டா நிறுவனம் கண்டறிந்தது. இப்படி ஏராளமான சாதகமான விஷயங்கள் இருப்பதால், தன்னுடைய நாட்டு மக்களுக்கும் இந்த மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறார் சன்னா மரின்
credit ns7.tv