“பாரத்நெட்” திட்ட டெண்டருக்கு மத்திய அரசு தடைவிதித்திருப்பதன் மூலம் அ.தி.மு.க. அரசின் டெண்டர்களில் ஊழல் தலைவிரித்தாடுவது உறுதியாகி இருப்பதால், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மேலும், ரூ.1815 கோடி டெண்டர் முறைகேட்டில் தொடர்புள்ள அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,” தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய சேவை வழங்கும் 1815 கோடி ரூபாய் மதிப்புள்ள “பாரத்நெட்” திட்ட டெண்டருக்கு அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை முடியும் வரை, அந்த டெண்டரில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என்று 30.4.2020 அன்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக “தி இந்து” ஆங்கிலப் பத்திரிகையில் வெளி வந்துள்ள செய்தி – கொரோனா பேரிடர் காலத்திலும், அ.தி.மு.க. அரசின் டெண்டர்களில் தலைவிரித்தாடும் ஊழலுக்கு ஆணித்தரமான ஆதாரமாக அமைந்திருக்கிறது.
பாரத்நெட் செயலாக்கம் குறித்த இந்த டெண்டர் விடப்பட்டதிலிருந்தே ஒவ்வொரு சர்ச்சைகளாக அணிவகுத்து வருகின்றன. முதலில் டெண்டர் கோரி விட்டு – பிறகு தொழில்நுட்ப புள்ளி கூட்டத்தை திடீரென்று ரத்து செய்தனர். உடனே தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த 1995-ம் வருட “பேட்ச்” மூத்த ஐ.எ.ஏஸ் அதிகாரி டாக்டர். சந்தோஷ் பாபு “விருப்ப ஓய்வில்” செல்வதாக விண்ணப்பித்தார். அதற்கான காரணத்தை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று 21.1.2020 அன்றே நான் அறிக்கை வெளியிட்டேன்.
ஆனால் சில தினங்களில் டாக்டர். சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பதவியிலிருந்து அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டார். தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுனத்தின் (டான்பிநெட்) நிர்வாக இயக்குநராக இருந்தவரும் மாற்றப்பட்டு – அந்த இடத்தில் அமைச்சர் திரு. தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாக (டி.ஆர்.ஓ) இருந்து – பிறகு நவம்பர் 2019-ல் ஐ.ஏ.எஸ். நிலைக்கு உயர்த்தப்பட்ட ஜூனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான திரு. டி.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.
இவ்வளவும் நடந்த பிறகும், “டெண்டரில் முறைகேடு என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு” என்று தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் திரு. உதயகுமார் “பொய்யும் புரட்டும்” நிறைந்த அறிக்கையை வெளியிட்டார். சில தினங்களுக்கு முன்பு கழக முதன்மைச் செயலாளர் திரு கே.என். நேரு அவர்கள் பாரத்நெட் திட்ட டெண்டர் ஊழல் பற்றி சுட்டிக்காட்டிய போது கூட, “திருத்திய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதில் முறைகேடு என்பது கற்பனையான குற்றச்சாட்டு” என்று மீண்டும் பொய் வாதம் செய்தார் அமைச்சர் திரு. உதயகுமார்.
இந்நிலையில்தான் தற்போது மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை (Department for Promotion of Industry and Internal Trade) தமிழக அரசு தலைமைச் செயலாளர் மற்றும் டான்பிநெட் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் எழுதி, “அறப்போர் இயக்கத்தின் புகாரின் மீது அவசர அறிக்கை கோரியிருப்பதுடன்” “ விசாரணை முடியும் வரை, அந்த 1815 கோடி ரூபாய் டெண்டரில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது” என்று 30.4.2020 அன்று உத்தரவிட்டுள்ளது. “மேக் இன் இந்தியா” கொள்கையின்படி உள்ளூர் தயாரிப்பாளர்கள், போட்டியாளர்கள் டெண்டர்களில் பங்கேற்கும் வாய்ப்புகளை குறைக்கும் வகையில் எந்த ஒரு டெண்டர் நிபந்தனைகளும் இருக்கக்கூடாது” என்றும், “அவ்வாறு டெண்டர்கள் விடப்பட்டால் அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் மத்திய அரசின் 15.6.2017-ம் தேதியிட்ட உத்தரவு தெளிவுபடுத்துகிறது.
இந்த உத்தரவை – பைபர் ஆப்டிக் டெண்டரில் அ.தி.மு.க. அரசு மீறியுள்ளது என்பதுதான் அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு! இதை ஏற்றுக் கொண்டுதான் இப்போது அ.தி.மு.க. அரசின் டெண்டர் குறித்த விசாரணையை மத்திய அரசு துவங்கியுள்ளது. அதுமட்டுமின்றி – இந்த டெண்டர் விவகாரத்தை மத்திய அரசின் மூன்று செயலாளர்கள் மற்றும் இரு இணைச் செயலாளர்கள் கொண்ட ஒரு நிலைக்குழுவும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புகாரில் முகாந்திரம் இருக்கிறது என்று கருதி பைபர் ஆப்டிக் டெண்டருக்கு அ.தி.மு.க. ஆட்சியின் “கூட்டாளி”அரசான மத்திய அரசே தடை போட்டிருப்பதால் – இப்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் என்ன சொல்லப் போகிறார்?
மத்திய அரசின் நடவடிக்கையும் கற்பனையானது என்று கூறுவாரா? இல்லை, பைபர் ஆப்டிக் டெண்டர் விட்டிருக்கிறோம் என்பதே கற்பனையானது என்று கூறுவாரா?
இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சமும் இருக்கிறது. “மேக் இன் இந்தியா” கொள்கைக்கு விரோதமாக வெளியிடப்படும் டெண்டர்களை கண்காணிக்க வேண்டும்”என்று 20.4.2018 அன்றே மத்திய விழிப்புணர்வு ஆணையம் அறிவுரை வழங்கியிருக்கிறது. அ.தி.மு.க. அரசின் கீழ் உள்ள லஞ்ச ஊழல் தடுப்புத்துறைக்கு இந்த அறிவுரை தெரியுமா? இந்த “டான்பிநெட்” டெண்டரை கண்காணிக்கிறதா? நான் ஏற்கனவே 28.1.2020 அன்று விடுத்த அறிக்கையில், “இந்த டெண்டர் கோப்புகளைக் கைப்பற்றி விசாரணை நடத்துக” என்று லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறைக்கு கோரிக்கை விடுத்தேன். அதன் பிறகாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விழித்துக் கொண்டு இந்த டெண்டரை கண்காணித்ததா?
கோப்புகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தியிருக்கிறதா?
ஆகவே, “பாரத்நெட்” டெண்டர் மீதான விசாரணை பாரபட்சமின்றி – நியாயமாக நடைபெறுவதற்கு – டான்பிநெட் நிர்வாக இயக்குநரை உடனடியாக வேறு துறைக்கு மாற்ற வேண்டும்.
“டெண்டர் விதிமுறை மீறல்கள் நடக்கவில்லை” என்று பொய்யும் புரட்டும் மிகுந்த அறிக்கைகளை வெளியிட்டு – ஊழலை மறைத்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் – இந்த முறைகேடுகளுக்கு காரணமான அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து மாநில லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரணை மேற்கொண்டிட உத்தரவிட வேண்டுமெனவும் தமிழக ஆளுநர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.