வியாழன், 7 மே, 2020

மெஹ்புபா முஃப்தியின் வீட்டு சிறைக் காலம் மேலும் 3மாதங்களுக்கு நீட்டிப்பு!


Image
ஜம்மு காஷ்மீரில் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் மெஹ்புபா முஃப்தியின் தண்டனை காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவித்தது. மேலும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது, இதற்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மேஹ்புபா முஃப்தி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இதனை அடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிப்பதாக கூறி மூன்று பேரும் பொதுப் பாதுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்படுபவர்களை 2 வருடத்துக்கு எந்தக் கேள்வியும் கேட்காமல் சிறையில் வைக்கலாம். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வாரன்ட் தேவையில்லை. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய அவசியமில்லை. 

இதனிடையே பொதுப்பாதுகாப்புச் சட்டத்தில் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் ஃபரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் 7 மாதங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து மெஹ்புபா முப்தியும் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மெஹ்புபா முஃப்தியிம் தண்டனை காலத்தை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தெரிவித்துள்ள மெஹ்புபா முஃப்தியின் கட்சியான, பிடிபி கட்சியின் தேசிய மாநாட்டுத்தலைவர் அலி சாஹர், மெஹ்புபா முஃப்தியின் விடுதலை குறித்து ஜம்மு காஷ்மீர் அரசிடம் கேட்டபோது அவருக்கு மேலும் மூன்று மாதம் வீட்டுக்காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறியதாக தெரிவித்துள்ளார்..
credit ns7.tv