வியாழன், 7 மே, 2020

ஆரோக்கிய சேது செயலியில் பாதுகாப்பு மீறல்கள் இல்லை:

Image
ஆரோக்கிய சேது செயலியில் பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் ஆரோக்ய சேது செயலி. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர், நாம் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதை இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும், சமூக விலகல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்களை மேற்கொள்ள இந்த செயலி உதவி வருகிறது. மக்கள் அனைவரும் இந்த செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆரோக்ய சேது செயலியில் பாதுகாப்பு பிரச்னை இருப்பதாகவும், 90 மில்லியன் இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் உள்ளதாகவும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எலியர் ஆண்டர்சன் என்ற ஹேக்கர் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனிப்பட்ட முறையில் தன்னை தொடர்புகொள்ளுமாறு ஆரோக்ய சேது ட்விட்டர் பக்கத்தை டேக் செய்திருந்தார். அந்த செயலியில் உள்ள குறைபாடுகளை பகிரங்கமாக வெளியிடுவேன் என அவர் மத்திய அரசை எச்சரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து இந்திய அரசாங்கம் அவரை உடனடியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளது. இந்நிலையில் ஆரோக்ய சேது செயலியில் பாதுகாப்பு பிரச்னைகள் இல்லை என மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. இந்த செயலியில் பாதுகாப்பு மீறல் இல்லை என்றும், மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


பயனரின் தகவல்கள் ஹேக்கரால் ஆபத்தில் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.இந்த அறிக்கைக்கு பதில் அளித்துள்ள ஹேக்கர், ‘இதில் எந்த தகவல்களையும் பார்க்க முடியாது என நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். எங்களால் பார்க்க முடியும். நான் உங்களிடம் திரும்பி வருவேன்’ என மீண்டும் எச்சரித்துள்ளார். 

இது குறித்து கூறியுள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசார், மக்களை பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒன்று ஆரோக்ய சேது செயலி என குறிப்பிட்டுள்ளார். இதில் உள்ள தரவுகளை பாதுகாக்க வலுவான கட்டமைப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

ஒரு சிலருக்கு தொழில்நுட்பத்தை எவ்வாறு நன்மைக்காக பயன்படுத்த வேண்டும் என தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.