சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு வியாபாரி உட்பட 4 பேர் இன்று உயிரிழந்தனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதில் சென்னையில் இன்று காலையில் மட்டும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூளைமேட்டில் இருவர் பலி:
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூளைமேட்டைச் சேர்ந்த கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரி (வயது 56), ஒருவர் கடந்த 6-ம் தேதி கொரோனா பாதிப்பால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் உயிரிழந்தார். இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டே நாளில் உயிரிழந்துள்ளார்.
இதே போல சூளைமேட்டைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியும் கொரோனா பாதிப்பால் இன்று காலை உயிரிழந்தார். இவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மூதாட்டிக்கு ஏற்கனவே உடல்நலக் குறைபாடு இருந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்தது.
தாம்பரத்தில் ஒருவர்:
மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த 78 வயது நபர் கடந்த 30-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ராயப்பேட்டை மூதாட்டி:
கொரொனோ தொற்றால் பாதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்று வந்த ராயப்பேட்டையை சேர்ந்த 72 வய்து மூதாட்டி ஒருவர், திருவேற்காடு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்
பலியான மூதாட்டியின் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று காலையில் மட்டும் 4 பேர் உயிரிழந்ததையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv