வெள்ளி, 1 மே, 2020

மகாராஷ்டிராவில் பிளாஸ்மா சிகிச்சையளிக்கப்பட்ட முதல் கொரோனா நோயாளி உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை பெற்ற முதல் நோயாளி   உயிரிழந்துள்ளார்.
மும்பை லீலாவதி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ரவிசங்கர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, கடந்த ஏப்ரல் 19ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்ட 53 வயதுடைய ஆண் நோயாளி ஒருவர் ஏப்ரல் 20ம் தேதியன்று லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். தொற்று தாமதமாக கண்டறியப்பட்டதால் அந்த நோயாளிக்கு மோசமான சுவாச கோளாறு ஏற்பட்டது. உடனடியாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அவருக்கு அளிக்கப்பட்டது. 
முன்னதாக அவருக்கு காய்ச்சல், தொண்டை வலி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்த நிலையிலும் தனக்கு தொற்று ஏற்பட்டிருக்காது என கருதியுள்ளார். எந்த வெளிநாட்டு பயணங்களும் மேற்கொள்ளாதது, கோவிட் தொற்று இருக்கும் நோயாளிகளுடன் தொடர்பு ஏதும் இல்லாததால் தனக்கு தொற்று ஏற்பட்டிருக்காது என அவர் கருதியுள்ளார்.
மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட போதே அவரின் உடல்நிலை மோசமாகியிருந்தது.
இதன் காரணமாக ஐசிஎம்ஆர் ஒப்புதல் பெற்று ஏப்ரல் 25ம் தேதி அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை தரப்பட்டது. இவர் தான் மகாராஷ்டிராவில் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற முதல் கொரோனா நோயாளியாவார்.
முதல் நாளில் 200மி அளவுக்கு பிளாஸ்மா அவரின் உடலில் ஏற்றப்பட்டது. மோசமான நிலையில் இருந்த அவரின் உடலில் ஆக்ஸிஜன் ஏற்றமடைவதற்கு அது உதவியது. இருப்பினும் 27ம் தேதி அதிகாலை அவரின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது. இதனால் அதிகளவு ஆண்டிபயாடிக்ஸ் அவருக்கு செலுத்தப்பட்டது. இருப்பினும் அன்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர்.ரவிசங்கர் கூறினார்.

முன்னதாக பிளாஸ்மா சிகிச்சை சோதனை கட்டத்தில் தான் உள்ளது, இது அங்கீகரிக்கப்படாத சிகிச்சை முறை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv/ANI