வியாழன், 14 மே, 2020

தமிழகத்தில் கொரோனாவை விரட்டி அடித்த பகுதிகள் இவை தான்

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்கள், கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.நீலகிரி, தர்மபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில், 10க்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் கோயம்பேடு பரவலால் சென்னை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு பட்டியலில், சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. திருவள்ளூரில் 492 பேருக்கும், செங்கல்பட்டு 416, கடலூரில் 413 பேருக்கும், விழுப்புரத்தில் 306 பேருக்கு தொற்று பாதிப்பு காணப்படுகிறது.
ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திருப்பி உள்ளனர். இதனால், இந்த ஐந்து மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.
ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் என மேற்கு மண்டலத்தில் 4 மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு யாருக்கு தொற்று கண்டறியப்படவில்லை. இதனால், ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக மாறி உள்ளது.வெளி ஊர்களில் இருந்து வருபவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதோடு, சோதனைச் சாவடிகளை கடக்காமல் குறுக்கு வழியில் மாவட்டத்திற்குள் நுழைபவர்களையும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 144 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், கடந்த பத்து நாட்களாக கோவையில் யாருக்கும் புதிய பாதிப்பு கண்டறியப்படவில்லை. தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், வெளியே வரும் மக்கள் முககவசம் அணிவதோடு, தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் வருபவர்களை கண்காணிக்க சோதனை சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், அறிகுறிகளுடன் வருபவர்கள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 9 நாட்களாக திருப்பூரில் புதிய தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை.அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 77 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 15 பேர் குணமடைந்தனர்.
இதைதவிர்த்து, நீலகிரி – 3, தர்மபுரி – 4 பேர், புதுக்கோட்டை- 4 பேர், திருவாரூர் – 4 பேர், சேலம் – 5 பேர், கன்னியாகுமரி- 9, தூத்துக்குடி -9 பேர், திருப்பத்தூர் 10 பேர் என இந்த 8 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர்.