வியாழன், 14 மே, 2020

திமுக எம்.பி.க்கள் vs தலைமைச் செயலாளர்: என்ன நடந்தது கோட்டையில்?

திமுக எம்.பி.க்கள், தமிழக அரசு தலைமைச் செயலாளர் இடையே நேற்று மாலையில் நடைபெற்ற சந்திப்பு, விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்த சந்திப்பில் தாங்கள் அவமதிக்கப்பட்டதாக திமுக எம்.பி.க்கள் குமுறினர்.
ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் மாநிலம் முழுக்க கொரோனா நிவாரண உதவிகளை திமுக வழங்கி வந்தது. மொத்தம் 17 லட்சம் மனுக்களை மக்களிடம் பெற்றதாக குறிப்பிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முக்கியமான ஒரு லட்சம் மனுக்களை அரசுக்கு அனுப்பி வைத்திருப்பதாக திங்கட்கிழமை தெரிவித்தார்.
திடீரென புதன்கிழமை மாநிலம் முழுவதும் திமுக.வின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும், தங்களுக்கு வந்த மனுக்களில் ஒரு பகுதியை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து அளித்தனர். மாவட்ட ஆட்சியர்கள் பலரிடம், ‘சந்தித்து பேச வேண்டும்’ என அப்பாய்ன்மெண்ட் கேட்டுவிட்டு, இந்த மனுக்களை கையில் கொடுத்து திமுக.வினர் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக ஒரு தரப்பில் கூறப்படுகிறது.
இப்படி மாநிலம் முழுக்க மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து முடித்த நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோர் கோட்டைக்கு வந்தனர். அங்கு தலைமைச் செயலாளரை சந்தித்து தங்களுக்கு வந்த மனுக்களில் ஒரு பகுதியை வழங்கியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு சுமூகமாக இல்லை.
இது தொடர்பாக திமுக தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘நேற்று (13.5.2020) மாலை 5.00 மணி அளவில் சென்னையை சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், கலாநிதி மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகம் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் தளபதியின் ஒன்றிணைவோம் வா வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அரசு உதவி கோரி ஒரு லட்சம் மக்கள் சமர்ப்பித்த கொரோனா கொள்ளை நோய் நிவாரண மனுக்களை ஒப்படைத்தனர்.
இவர்கள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லால் முன்னாள் மத்திய அரசின் கேபினட் அமைச்சர்களாக பல்லாண்டுகள் பதவி வகித்தவர்கள். இவர்களுக்கான குறைந்தபட்ச வரவேற்பு முறைகளைக்கூட அங்கு பின்பற்றவில்லை. இருப்பினும் கழக எம். பி.க்கள் கழகத் தலைவரின் நேரடி பார்வையில் செயல்படுத்தப்படும் ஒன்றிணைவோம் வா செயல் திட்டம் பற்றி விளக்கியதோடு இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பல்லாயிரம் மனுக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தனர்.

அதோடு அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் அளித்து உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தலைமைச் செயலாளர் சண்முகம் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதில் கவனம் செலுத்தினார்.
கலாநிதி எம். பி.யின் வேண்டுகோளை ஏற்று, பேச்சு வார்த்தைக்கு இடையூறாக இரைச்சலுடன் ஒலித்துக் கொண்டிருந்த டி.வி.யின் ஒலியளவை குறைக்கச் சென்ற ஊழியரையும் தடுத்து விட்டார். டி.ஆர். பாலு, மனுக்கள் மீதான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டியதின் அவசியத்தையும் அவசரத்தையும் சுட்டிக் காட்டினார். இதற்கு பதிலளித்த தலைமை செயலாளர் சண்முகம் போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில் மனுக்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்லமுடியாது என்று கூறினார்.
மேலும், ‘திஸ் ஈஸ் தி ப்ராப்ளம் வித் யூ பீப்பிள்’ ( உங்களை போன்ற ஆட்களிடம் இது தான் பிரச்சனை) என்று உரத்த குரலில் கூறினார். இருப்பினும், கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புறப்படும் முன் மீண்டும் தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்களிடம், ‘சார், தயவு செய்து விரைந்து நடவடிக்கை எடுங்கள். கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரசின் உதவிக்கு தவித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று டி. ஆர. பாலு கூறி னார். தமிழக மக்களுக்கு நிவாரண உதவி பெற்றுத்தர வேண்டுகோள் விடுக்க சென்ற கழக பாராளுமன்ற உறுப்பினர்களை கண்ணியக் குறைவாக நடத்திய தலைமைச் செயலாளர் சண்முகம் உடனடியாக வருத்தமும் மன்னிப்பும் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், இப்பிரச்சினையை நாடாளுமன்ற உரிமைக்குழுவுக்கு எடுத்துச் சென்று தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என திமுக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
தலைமைச் செயலாளர் அறையில் நடந்ததாக கூறப்படும் இந்த நிகழ்வு பற்றி தலைமைச் செயலாளர் எந்தத் தகவலையும் வெளிப்படையாக கூறவில்லை. திமுக.வின் புகார் அரசியல் வட்டாரத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.