ஞாயிறு, 19 ஜூலை, 2020

தமிழகத்தில் இதுவரை 14 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா: குணம் அடைந்தவர்கள் யார், யார்?

தமிழகத்தை பொறுத்த வரையில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகின்றது. அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. சட்டமன்ற உறுப்பினர்களில் முதலில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி சில வாரங்களுக்கு முன் மரணமடைந்தார்.

திமுகவில் செய்யூர் எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு, செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தான், ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், திட்டக்குடி எம்.எல்.ஏ கணேசன் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.


அதே போல, அதிமுகவில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி, உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன், உயர்க்கல்வித்துறை அமைச்சரும் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.பி.அன்பழகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் நிலோஃபர் கஃபில் உள்ளிட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இவரையும் சேர்த்து 14 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குணம் அடைந்தவர்கள் யார், யார்?

செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான ஆர்.டி.அரசு கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தான், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜூனன், சதன் பிரபாகரன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், சிகிச்சை முடிவடைந்த நிலையில் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.