சென்னையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கி, நாளை முதல் செயல்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட சிகிச்சை முறைகளால் இதுவரை 61,000 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மதுரையில் கொரோனா சிகிச்சை தொடர்பாக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார் ஆகியோர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ உபகரணங்கள் வாங்க முதலமைச்சர் கூடுதலாக 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினார். சென்னையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கி, நாளை முதல் செயல்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
தொடர்ந்து, நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்தர உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவு அரசிடம் உள்ளதாகவும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கூறினார்.
உலகத்திலேயே தமிழகத்தில் தான் கொரோனாவிற்கு முன்மாதிரி கட்டமைப்பை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுதாக கூறிய அவர், சித்தா, ஆயுர்வேதா போன்ற சிகிச்சை முறைகளால் இதுவரை 61,000 பேர் குணமடைந்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.