சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை 2 நாட்களில் தாக்கல் செய்யப்படும் என மாநில மனித உரிமை ஆணைய அதிகாரி குமார் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக, சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதி, கோவில்பட்டி அரசு மருத்துவர்கள், கிளைச் சிறை அதிகாரி ஜெயராஜ் குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேரிடம் மனித உரிமை ஆணைய துணை கணகாணிப்பாளர் குமார் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையை முடித்து பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 2 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே, வியாபாரிகள் மரணம் தொடர்பாக, கோவில்பட்டி கிளைச் சிறையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிபிஐ அதிகாரி ஏ.டிஎஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.