புதன், 8 ஜூலை, 2020

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய ஊரடங்கு தான் காரணமா? ... புள்ளிவிவரங்களுடன் அலசும் நியூஸ்7 தமிழ்..

சென்னையில்  மீண்டும் இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. முழு ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு பணிகள் தொடங்கி இருக்கின்றன. அப்படி எனில் முழு ஊரடங்கு பலன் அளித்திருக்கிறதா? என்ற கேள்விக்கான விடையை தேட வேண்டியது கட்டாயமாகிறது.

கோடாரியை கொண்டு கொசுவை கொல்வதற்கு சமம் என்பது தான் முழு ஊரடங்கு என்ற கேள்விக்கு மருத்துவ குழுவினர் அளித்த பதில். முழு ஊரடங்கு என்பது மட்டுமே கொரோனாவிற்கான தீர்வு அல்ல என்பது அரசியல்வாதிகள் தொடங்கி, மருத்துவக்குழுவினரும் தரும் பதில்.ஆனால் உண்மையில் முழு ஊரடங்கு என்பது கொரோனாவை ஒழிப்பதில் பலன் அளித்திருக்கிறதா என்பதற்கான புள்ளி விபரங்களை ஆராய்வோம்.

கடந்த 7 நாட்களில் சென்னையில் பதிவாகியுள்ள கொரோனா எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், கடந்த 17 நாட்கள் முழு ஊரடங்கிற்கான பலனை சென்னை அனுபவிக்க தொடங்கி இருக்கிறது என்பதை அறிய முடியும். 

கடந்த முப்பதாம் தேதியன்று தமிழகத்தில் கொரோனா தொற்று  கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 3856. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் 2393. அதாவது தமிழகத்தில் பதிவான கொரோனா தொற்று எண்ணிக்கையில் சென்னையில் பதிவானது 62 சதவீதம் ஆகும்.

➤ ஜூலை 1ம் தேதியன்று தமிழகத்தில் கொரோனா தொற்று  உறுதியான 3807 பேரில் சென்னையை சேர்ந்தவர்கள் 2182.. அதாவது மொத்த கொரோனா பாதிப்பில் சென்னை மட்டும் 57 சதவீதம்...

➤  2ம் தேதியை பொறுத்த மட்டில் தமிழகத்தில் கொரோனா தொற்று  எண்ணிக்கை 4270.  இதில் சென்னையை சேர்ந்தவர்கள் 2027. ஒட்டு மொத்தத்தில் இது 47 சதவீதம்.

➤ 3ம் தேதியன்று தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு  4329. சென்னையில் மட்டும் 1842. அதாவது தமிழக அளவில் சென்னையின் சதவீதம் 48 சதவீதம்.

➤ 4ம் தேதியன்று இந்த சதவீதம் மேலும் குறைய ஆரம்பித்தது. அன்றைய தினம், தமிழகத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 4280. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் 1842. அதாவது மொத்த கொரோனா பாதிப்பில் சென்னை 43 சதவீதம். 

➤ 5ம் தேதியன்று தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 4150. சென்னையில் மட்டும் 1713 பேர். அதாவது தமிழக அளவில் சென்னையின் சதவீதம் 41 சதவீதமாக குறைந்தது.

➤ 6ம் தேதியன்று தமிழகத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 3827. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் 1747. அதாவது மொத்த கொரோனா பாதிப்பில் சென்னை 45 சதவீதம்

➤ 7ம் தேதியன்று தமிழகத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 3616 பேரில் 1203 பேர் அதாவது 33% பேர் மட்டுமே சென்னையை சேர்ந்தவர்கள். இந்த புள்ளிவிபரங்கள் தரும் விடை மிக முக்கியமானது. சென்னையில் முழு ஊரடங்கு என்பது கொரோனா பாதிப்பை குறைத்து கொண்டே வருகிறது என்பதை தெளிவாகவே எடுத்து கூறுகிறது. 

ஒவ்வொரு நாளும் ஒட்டு மொத்த தமிழக பாதிப்பில் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் குறைந்து வருவதை இந்த வரைகலையில் காண முடியும். கடந்த 30ம் தேதியன்று 62 சதவீதமாக இருந்த சென்னை பாதிப்பு 5ம் தேதியன்று 33 சதவீதமாக குறைந்துள்ளது என்பதே அதற்கான ஆக சிறந்த எடுத்துக்காட்டு 

முழு ஊரடங்கால், சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவிப்பதால் முழு ஊரடங்கை தொடர வேண்டுமா என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. கொரோனாவோடு வாழ்வீர்களா? பசியோடு வாழ்வீர்களா என்ற கேள்வியை  எழுப்பினால், கொரோனாவையே சாதாரண குடிமகன் தேர்ந்தெடுப்பான் என்பதே நிதர்சனம். காரணம் கொரோனாவை விட கொடியது பசி என்பதே. அப்படி எனில் முழு ஊரடங்கு கொடுத்துள்ள படிப்பினைகளை கையில் எடுத்து செயல் பட வேண்டியது கட்டாயமாகிறது. 

தேவையின் வெளியே செல்வதை தவிர்ப்பது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது என முழு ஊரடங்கின் பாடங்களை எடுத்து கொண்டு பயணிப்போம். கொரோனாவை வெல்வோம்.