படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த பழங்குடியின மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95% பெற்று அசத்தியுள்ளார். பேருந்து இல்லாததால் தேர்வு எழுத முடியாமல் தவித்த இந்த மாணவிக்கு கேரள அரசு சிறப்பு பேருந்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் அமைந்துள்ளது பூச்சுகொட்டாம்பாறை. இங்கு பெரும்பாலும் வசிப்பவர்கள் பழங்குடியின மக்கள் தான். இங்கு பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிப்பதே அரிது. அதிலும் 10 ஆம் வகுப்பு வரை படிப்பது எல்லாம் மிகவும் அரிதான நிகழ்வு. இப்படியொரு சமுதாயத்தில் இருந்து வந்த ஸ்ரீதேவின் இன்று 10 ஆம்வகுப்பு தேர்வில் 95% எடுத்து ஒட்டு மொத்த பழங்குடியின சமூகத்தையும் பெருமையடைய செய்துள்ளார்.
இந்த சிற்றூரில் அதிசயமாக ஸ்ரீதேவி என்னும் பெண் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் உள்ள சாலக்குடி என்னும் ஊரில் தங்கும் வசதியுடன் உள்ள பள்ளியில் படித்து வந்தார். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஆரம்பித்ததும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அவர் இதற்காகக் கால்நடையாக நடந்து வந்து கேரள எல்லையை அடைந்து அங்கிருந்து அவருடைய தந்தை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
அவர் மீதமுள்ள தேர்வு எழுதப் போக்குவரத்து வசதி இன்றி திண்டாடினார். இதை அறிந்த கேரள அரசு ஸ்ரீதேவி ஒரு மாணவிக்காகச் சிறப்புப் பேருந்தை இயக்கியது. அந்த பேருந்து மூலம் அவர் பள்ளிக்குச் சென்று மீதமுள்ள தேர்வுகளை எழுதினார். தற்போது வெளியான தேர்வு முடிவுகளின்படி அவர் 95% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவருடைய ஊரில் அவருடைய இனத்தில் இவ்வளவு படித்தவரும் 95% மதிப்பெண் பெற்றவரும் இல்லை என்பது மாணவி ஸ்ரீதேவிக்குக் கிடைத்துள்ள பெருமையாகும்.