பிரதமர் நரேந்திர மோடி லடாக் சென்றதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய பவார், கடந்த 1962ம் ஆண்டு போரில், இந்தியாவை சீனா தோற்கடித்தது. ஆனாலும் அப்போதைய பிரதமர் நேரு லடாக் சென்றார். பாதுகாப்பு அமைச்சராக இருந்த யஷ்வந்த்ராவ் சவானும் எல்லைக்குச் சென்று படைகளின் மன உறுதியை உயர்த்தியிருந்தார். இரு நாட்டு படைகளுக்கு இடையே ஒரு மோதல் சூழல் நிலவும் போது, வீரர்களின் மன உறுதியை உயர்த்தும் வகையில் நாட்டின் தலைவர் செயல்பட வேண்டியது அவசியம். அதனால் பிரதமர் மோடி லடாக் சென்றதில் எனக்கு எந்த ஒரு ஆச்சரியமுமில்லை என்று குறிப்பிட்டார்.
கடந்த 1993-ம் ஆண்டு தான் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, சீனாவுக்குச் சென்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதாக கூறிய சரத் பவார், அதன்படி இரு நாட்டு வீரர்களும் எல்லையிலிருந்து உடனடியாக திரும்ப பெறப்பட வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில், லடாக் பகுதியில் ஆயுதங்களை கையாளக் கூடாது என்ற ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்தில், தற்போதைய பிரச்னையை ராஜதந்திர வழிமுறைகள் மூலம் தீர்க்க வேண்டும் என்றும், சீனா மீது சர்வதேச அழுத்தத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறினார். அதன்படி ராஜதந்திர பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரு தரப்பிலிருந்தும் படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் படித்ததாகவும், அவ்வாறு நடைபெற்றிருந்தால் அது நல்லது என்றும் அவர் குறிப்பிட்டார்.