கொரோனாவின் கொடூர முகம், மாணவர்களின் கல்வியையும் கேள்வி குறியாக்கி உள்ளது. கடும் மன உளைச்சலை தாண்டி மாணவர்கள் கல்வியை கற்பது எப்படி என்ற கேள்வி பூதாகரமாக எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை தான் தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ஆம், சிபிஎஸ்சி மாணவர்களுக்கான பாட திட்டத்தை சுமார் 30 சதவீதம் குறைக்கப்படும் என அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டது மத்திய அரசு. பாடதிட்டங்களை நீக்குவதில் என்ன சர்ச்சை என்ற கேள்வி எழுகிறது அல்லவா?. பாட திட்டங்களை குறைப்பது என்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பே கிடைத்தன. மாறாக நீக்கப்பட்ட பாடங்கள் தான் சர்ச்சைக்கு வித்திட்டன.
பதினொன்றாம் வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்றவை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. மேலும், “உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும்? இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகிய அத்தியாயங்களையும் நீக்கி உள்ளது சிபிஎஸ்இ.
12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில், சமகால உலகில் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை வளம், இந்தியாவின் புதிய சமூக இயக்கங்கள் போன்றவை நீக்கப்பட்டுள்ளன. அதே போன்று 12ம் வகுப்பு பாட திட்டத்தில் இருந்து இந்திய வெளியுறவு கொள்கை என்ற பாடத்திலிருந்து பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை மற்றும் மியான்மர் போன்ற அண்டை நாடுகளுடனான உறவு என்ற அத்தியாயமும் நீக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து ஜனநாயக உரிமைகள், இந்திய அரசியலமைப்பின் கட்டுமானம் போன்றவை நீக்கப்பட்டுள்ளன.9ம் வகுப்பு பொருளாதார பாடத்தில் இருந்து இந்தியாவின் உணவு பாதுகாப்பு பகுதி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனநாயகமும் பன்முகத்தன்மையும், ஜாதி, மதம் மற்றும் பாலினம், ஜனநாயகத்திற்கான சவால்கள் போன்ற பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் நலன் கருதி என மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்ய தொடங்கின. காரணம், இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கிய சித்தாந்தங்களாக கருதப்படும் மதசார்பின்மை, கூட்டாட்சி , குடியுரிமை போன்றவை நீக்கப்படுவது ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டை நோக்கி பாஜக நகர்வதை காட்டுவதாக கொந்தளித்தன எதிர்க்கட்சிகள்.
கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்து, சிபிஎஸ்இ பாடங்களைக் குறைக்க வேண்டுமேயொழிய, பாஜக அரசு கல்வித் துறையில் இந்துத்துவ சனாதனக் கோட்பாடுகளைப் புகுத்தக் கூடாது என காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார் வைகோ.
கொரோனாவின் மீது பழி போட்டு 30% பாடம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. நீக்கப்பட்ட பாடங்களுக்கு பதிலாக, மாணவர்களின் மன அழுத்ததைப் போக்கும் பஸ்டர்களாக மெய் காம்ப், கு க்ளக்ஸ் கிளனின் வரலாறு மற்றும் மார்க்விஸ் டி சேடின் ஜஸ்டின் ஆகிவற்றை சேர்க்க வேண்டும் என கிண்டலடித்துள்ளார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கொரோனா தொற்றை வாய்ப்பாகப் பயன்படுத்தி, மத்திய அரசு தனது சொந்தக் கொள்கைகளை நிறைவேற்றிட முயன்று வருவது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியினரின் இந்த கண்டன அறிக்கைகள், மத்திய அரசு மீதான நெருக்கடியை அதிகரிக்க தொடங்கின. ஒரே நாடு என்ற கொள்கையை நோக்கி மத்திய அரசு நகர்வதாக எதிர்க்கட்சிகள் கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்ததும், சிபிஎஸ்இ தரப்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது.
கொரோனா கால சூழலைக் கருத்தில் கொண்டு 2020- 21 ஆம் கல்வியாண்டுக்கு மட்டுமே பாடத்திட்டக் குறைப்பு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ள சிபிஎஸ்இ. இது தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மறுபுறம் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் விளக்கம் அளித்துள்ளார். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதாகவும், வேறு உள்நோக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகளை பின்பற்றியே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது என்றும், கல்வியில் அரசியல் செய்வதைவிட்டு விட்டு, நமது அரசியலில் அதிக கல்வியை புகுத்துவோம் என்றும் மத்திய அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு விட்டாலும், கூட்டாட்சி, குடியுரிமை, மதசார்பின்மை போன்ற பாடங்கள் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, எதிர்க்கட்சிகளின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்பது தான் அரசியல் நோக்கர்களின் கருத்து.