காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, படேல் சமூகத்தின் இடஒதுக்கீடு போராட்டத் தலைவராக அறியப்பட்ட ஹர்திக் படேலை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக சனிக்கிழமை நியமனம் செய்துள்ளார்.
ஹர்திக் படேல் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 26 வயதான ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக நியமனம் செய்ததற்கு யுபிஏ தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்தார்.
2015-ம் ஆண்டு மெஹ்சானா கலவர வழக்கில் ஹர்திக் படேலுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இன் விதிகள்படி அவர் தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டது.
2015ம் ஆண்டு பட்டிதார் இடஒதுக்கீடு போராட்டம் தொடர்பாக தேசத்துரோக வழக்குகளை எதிர்கொண்டுள்ள படேல், இந்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி நீதிமன்றம் விசாரணையின் போது ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து கைது செய்யப்பட்டார். 4 நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் பதான் மற்றும் காந்திநகர் மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பாக மீண்டும் கைது செய்யப்பட்டார்.
2015-ம் ஆண்டில் பட்டிதார் இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்த பின்னர், ஹர்திக் படேல் மீது குஜராத் முழுவதும் 20க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில்தான், ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.