கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பரவல் காரணமாக உலகின் பல்வேறு செயல்பாடுகள் ஸ்தம்பித்த நிலையில் உள்ளது. இந்நிலை எப்போது மாறும் என்று யோசிக்கும் முன்பே ஆங்காங்கே பல்வேறு புதிய பிரச்சனைகள் ஆங்காங்கே பூதகரமாக கிளம்பிய வண்ணம் உள்ளது. பெரிய பெரிய தொழிற்சாலைகள் முதற்கொண்டு அனைத்தும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
பழங்குடி மக்கள் மற்றும் மழைவாழ் பழங்குடியினர் இதனால் பெரும் பாதிப்பினை சந்தித்து வருகின்றனர். கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் உள்ள 18 கிராமங்களில் வசித்து வருகின்றனர் இருளர் பழங்குடி மக்கள். பழங்குடி மக்களுக்கான மரபு மற்றும் முறைகளில் இருந்து கொஞ்சம் முன்னேற்றம் கண்டு இருந்தாலும் கூட வெளியுலக தொடர்பு என்பது இங்கு முழுமையாகவும் அரசு, பொது போக்குவரத்தையே நம்பி இருந்தது.
சாலை போக்குவரத்தை நம்பி இருக்கும் பழங்குடியினர்
சாதாரண காய்கறி பழங்கள் வாங்குவது முதற்கொண்டு கல்வி, வேலை என அனைத்திற்கும் இவர்கள் நம்பியிருப்பது அரசு பேருந்துகளை மட்டும் தான். 67 நாட்கள் கழித்து கோவையின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் ஜூன் மாதம் 1ம் தேதி இயக்கப்பட்டது. ஆனால் நோய் தொற்றின் காரணமாக மீண்டும் பேருந்து செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு முன்பும் பின்பும் இருளர்களின் வாழ்வாதாரம் என்பது சமதள பகுதிகளில் இருக்கும் வயல்வெளிகளில் வேலை பார்ப்பதும், செங்கல் சூளையில் கல் அறுப்பதும் தான்.
போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மக்கள் சமதள பகுதிகளில் வேலைக்கு செல்வது சவாலான காரியமாக அமைந்துவிட்டது. கோவையில் இருந்து 22 கி.மீக்கு அப்பால் இருக்கும் ஆனைகட்டி மலைக்கு செல்லும் முன்னரே அமைந்திருக்கும் மாங்கரை பகுதி செங்கல் சூளைகள் நம்மை புகையுடன் வரவேற்கிறது. ரம்மியமான சூழலில் மலையின் முதல் வளைவை அடையும் போதே “யானைகள் வரும் பகுதி” என்றிருக்கும் எச்சரிக்கை பதாகைகள் நம்மை மேலும் எச்சரிக்கையுடன் பயணிக்க சொல்கிறது.
சர்வதேச பறவைகள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஆசிரமத்தை தாண்டினால் உடனே ஆலமர மேடு வரும் என்று முன்பே கூறியிருந்த பழங்குடியின தலைவர் வள்ளியை காண அதிகாலையில் பயணமானோம். ”எப்போதாவது எதிரே வரும் இரு சக்கர வாகனம், அடுத்த வளைவில் நம்மை வரவேற்க காத்திருப்பது யார்? யானையா? என்றொரு சந்தேகம். யானை வந்தால் வண்டியை திருப்பி ஓட்டிச் சென்றுவிடுவோமா என்ற பயம்” அவர்களின் இயல்பு வாழ்க்கையை நமக்கு எடுத்துக் கூறியது.
ஆலமரமேட்டில் இருந்து தினமும் 7 கி.மீ வரை பயணித்து வயல்களிலும் செங்கல் சூளைகளிலும் வேலை செய்வது எத்தனை கடினமோ அதே அளவு கடினம் அரசு தரும் ரூ. 1000த்தையும் இலவச ரேசன் பொருட்களையும் வைத்துக் கொண்டு உயிர் வாழ்ந்துவிட முடியும் என்பதும்.
செங்கல் சூளைகளிலும் அனைத்து நாட்களும் வேலை இருக்காது என்று நம்மிடம் பேசிய வள்ளி “செங்கல் சூளையில் இருக்கும் இயந்திரத்தை ஓட்டி கல்லை அறுக்க எட்டு பேர் வேண்டும். எட்டு பேரும் தயாராக இருந்தால் மட்டுமே வேலைக்கு செல்ல முடியும். அதே வாரம் முழுமைக்கும் வேலை இருக்காது. மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே வேலை இருக்கும்” என்கிறார். அவர்களின் கூலியும் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை தான். ஆண்களுக்கு ரூ. 450 மற்றும் பெண்களுக்கு ரூ. 300 தான் ஒரு நாள் சம்பளம். விரைவில் பேருந்து வசதிகள் துவங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கட்டிட வேலைகளுக்கு செல்லும் கல்லூரி மாணவர்கள்
இந்த பகுதியில் இருந்து கல்லூரி சென்று கொண்டிருந்த மாணவர்களும் கூட ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கல்லூரி திறக்கப்படாததால் கட்டிட வேலைகளுக்கும், கிடைக்கும் வேலைகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றனர். “ஒரு நாளைக்கி நானூறு ஐநூறு கெடைச்சாலும் கூட போதும்னு அவங்க பேசாம கெளம்பி போறாங்க” என்று வருத்தம் தெரிவிக்கிறார் ஊர் தலைவர்.
சொந்த பூமியிலும் விவசாயம் செய்ய இயலவில்லை
இருளர் பழங்குடியினருக்கு அங்கேயே சொந்த வனபூமி இருக்கிறது. அங்கே சென்று விவசாயம் பார்த்துக் கொள்ளலாம் தான். ஆனால் அதற்கும் வசதி வேண்டும். காசு பணம் இருக்கிறவர்களால் தான் மற்ற எதைப் பற்றியும் கவனிக்காமல் 24 மணி நேரமும் இங்கே இருக்கும் விவசாய வேலைகளை பார்க்க முடியும் என்று கூறுகிறார் விவசாயம் செய்து வரும் பார்வதி. அவருடைய பூமியில் தற்போது மிளகாய், கத்திரிக்காய், தக்காளி ஆகியவற்றை பயிரிட்டு உள்ளார்.
அரசின் செயல்பாடுகள்
அரசின் செயல்பாடுகள் வரவேற்கதக்கவையாக இருந்த போதிலும், போதுமான மளிகைப் பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது என்கிறார் வள்ளி. 5 பேர்களுக்கு மேல் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு எப்படி ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் போதுமானதாக இருக்கும்? இந்த பகுதியில் ஒரே ஒரு சிறிய மளிகைக் கடையும், அதைவிட்டால் ரேசன் கடையும் தான் உள்ளது. மளிகைப் பொருட்கள் வாங்க நாங்கள் சின்னத்தடாகம் செல்ல வேண்டும். ஆனால் டாஸ்மாக்கோ மாங்கரை செக்போஸ்ட்டிற்கு முன்னதாகவே இருக்கிறது. மக்களின் தேவை எது என்று அறிந்திருக்க வேண்டும் என்கிறார் அவர். பணமாக கொடுத்திருந்தாலும் அது பெரிய வகையில் உதவியிருக்கும் என்று கூறும் அவர் எதிர்கட்சி சார்பிலும் தன்னார்வலர்கள் தரப்பிலும் செய்த உதவிகளை நினைவு கூறுகிறார்.
கூட்டு சமூகமாக செயல்பட்ட இருளர் பழங்குடியினர்
கொரோனா காலத்தில் அம்மா உணவகம் எவ்வாறு சென்னையில் பலரின் பசியை போக்கியதோ அதே போன்று இருளர்கள் வாழும் பகுதியில், “கம்யூனிட்டி கிச்சன்கள்” பலரின் பசியை போக்கியது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு முன்பு, அம்மக்களுக்கு தேவையான மளிகை மற்றும் இதர உணவு பொருட்களை கொடுக்கவும் கூட்டு சமூகமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு அங்கு வாழும் மக்களால் பகிர்ந்து உண்ணப்பட்டது என்று கூறுகிறார் வள்ளி.
மாங்கரையும் ஆலமரமேடு தான் ஆரம்ப பகுதி அதனை தாண்டி செல்ல செல்ல விரியும் ஆனைகட்டி மலை தன்னுள்ளே பேருந்துகள் செல்லவும் வழி விடாமல் கிளைத்து கொண்டு ஆங்காங்கே இருளர் குடிகளை பாதுகாத்து வருகிறது. அந்த பகுதிகளுக்கு நடந்து தான் செல்ல வேண்டும் அல்லது இரு சக்கர வாகனத்தில் தான் செல்ல வேண்டும். அது போன்ற பகுதிகளில் அன்றாட வாழ்வு என்பது மிகுந்த சவால்களை கொண்டதாக இருக்கிற