ஞாயிறு, 12 ஜூலை, 2020

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது கொரோனாவா? ஊரடங்கா?

வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, புனே நகரில்  மீண்டும் ஒரு பத்து நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மும்பை நகருக்கு அருகிலுள்ள  தானே, மீரா-பயந்தர், கல்யாண்-டோம்பிவிலி ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள், குறைந்தது ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களில், தமிழகத்தின் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், அசாமின்   குவஹாத்தி மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில்  கடுமையான ஊரடங்கு முயற்சிக்கப்பட்டது. இருப்பினும்,  எந்தவொரு பகுதியிலும் கொரோனா பாதிப்புகளில்  குறிப்பிடத்தக்க மந்தநிலை ஏற்படவில்லை.

நிச்சயமாக, ஊரடங்கின் தாக்கத்தை தற்போது மதிப்பிடுவது மிகவும் தவறானது என்ற கோணத்திலும்  வாதிடலாம். ஏனெனில், மேற்கூறிய பகுதிகளில் இன்றைக்கும் கூட ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஊரடங்கு இல்லாத நிலையில் இந்த பகுதிகளில் கொரோனாவின் பாதிப்பு மிகவும் மோசமானதாக இருக்கும் என்பதும் சாத்தியம்.

எவ்வாறாயினும், நாடு தழுவிய முதல் இரண்டு பொது முடக்கநிலையின் போது கொரோனா பரவல் வீதத்தை குறைப்பதிலும், ஆபத்தைக் கட்டுப்படுத்துவதிலும் அடைந்த வெற்றியை, தற்போதைய உள்ளூர் அளவிலான ஊரடங்கின் மூலம் பெற வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

 

இருப்பினும், உள்ளூர் மட்டத்தில் அமல்படுத்தப்படும்  ஊரடங்குகள் நாம் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை நினைவூட்டுகின்றன. கடந்த சில வாரங்களில் பொறுப்பற்ற நடத்தைக்கான பல சம்பவங்களைப் பற்றி நாம் கேட்டறிந்தோம். அதில், சில சம்பவங்கள் மிகவும் சோகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. பீகாரில் நடந்த திருமண விழா, ஹைதராபாத்தில் நடைபெற்ற    பிறந்தநாள் விருந்து பலருக்கும் கொரோனா பாதிப்பு  ஏற்பட வழிவகுத்தது. இந்த இரண்டு நிகழ்ச்சியில்  உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் கொரோனா பாதிப்பால் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இன்னும் பல பகுதிகளில், பொது இடங்கள் மக்கள் கூடத் தொடங்கியுள்ளன. முகக்கவசம் அணிவது மற்றும் சமூக விலகல் நெறிமுறையைக் கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு இன்னும் அனைவரிடத்திலும்  சென்று சேரவில்லை. தேவையற்ற, அவசியமில்லாத செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

எனவே, தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு, நாம் நமது பாதுகாப்பை குறைத்துக் கொள்வதற்கான கால சூழல் இன்னும் உருவாகவில்லை என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதாக அமைகிறது .

கொரோனா பாதிப்புகளின்  எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் போது நாம் அலட்சியமாக இருக்க முடியாது. வெள்ளியன்று, நாடு முழுவதும் 27,000க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதியப்பட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை தற்போது 8.2 லட்சத்திற்கும் அதிகமாக கட்னதுள்ளது. கடந்த ஒன்பது நாட்களில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக 7,862 பேருக்கு கொரோனா தொற்று  கண்டறியப்பட்டது. இது மாநிலத்தின் புதிய சாதனையாக விளங்குகிறது. கர்நாடகா மாநிலத்தில் 2,313 பேருக்கு கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டது. இது, அந்த மாநிலத்தில் ஒரு நாளில் கண்டறியப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

அதிகபட்ச கொரோனா பாதிப்புகளைக் கொண்ட முதல் பத்து மாநிலங்கள் பட்டியலில், ஆறு மாநிலங்கள்  தற்போது தேசிய வளர்ச்சி விகிதத்தை விட வேகமாக வளர்ந்து வருகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு, நான்கு மாநிலங்கள் மட்டுமே அத்தகைய நிலையில் இருந்தன. அதன் பின்னர் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் வேகமெடுத்தது.

எவ்வாறாயினும், டெல்லியில் கொரோனா  மந்தநிலையைத் தொடர்கிறது. தெலுங்கானாவிலும், கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.  ஒவ்வொரு நாளும் கண்டறியப்படும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 1,700-1,800 என்பதில் இருந்து தற்போது 1,200-1,300 வரை குறைந்துள்ளது.

அசாம் மற்றும் ஒடிசாவில் கொரோனா பரவலின் எழுச்சி தொடர்கிறது. இரு மாநிலங்களும், நேற்று மட்டும் 570 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் தற்போது பாதிப்பின் எண்ணிக்கை 12,526 ஆகவும், அசாமின் மொத்த எண்ணிக்கை 14,600-ஆகவும்  உள்ளன.