புதன், 8 ஜூலை, 2020

இந்திய தொற்றுநோய் மருத்துவத்துறையின் மூத்த விஞ்ஞானி ககன்தீப் காங் திடீர் ராஜினாமா

டாக்டர் ககன்தீப் காங், இந்தியாவின் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளுள் ஒருவர் ஆவார். இவர் ரோட்டோவைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பில் இவரது பங்கு அளப்பரியது ஆகும். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரிதொழில்நுட்பத்துறையின் கண்காணிப்பில் உள்ள Translational Health Sciences and Technology Institute (THSTI) அமைப்பின் நிர்வாக இயக்குனர் பதவியை, டாக்டர் காங், ராஜினாமா செய்துள்ளார்.

டாக்டர் காங், லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் தேர்வாகி இருந்த முதல் இந்திய பெண் விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றவர். கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவிட் தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக டாக்டர் காங் தலைமையில், சமீபத்தில் தான் குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது சொந்த காரணங்களுக்காகவே, நிர்வாக இயக்குனர் பதவியை, ராஜினாமா செய்துள்ளதாக டாக்டர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார். டாக்டர் காங், வேலூரில் உள்ள கிறித்தவ மருத்துவ கல்லூரியில், இரைப்பை குடல் அறிவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மாற்று சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில், டாக்டர் காங், கடந்த 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2021ம் ஆண்டுடன் அங்கு அவரது பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதுதொடர்பான தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சியில், டாக்டர் காங், சமீபகாலமாக ஈடுபட்டு வந்தார். தற்போது இவர் ராஜினாமா செய்துள்ள சம்பவம், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா, ரஷ்யாவை முந்தி 3வது இடத்தை பிடித்துள்ளது.

பரிதாபாத்தில் உள்ள மாற்று சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனைக்காக பரிதாபாத் ஈஎஸ்ஐ மருத்துவமனையில், டாக்டர் ககன்தீப் காங் தலைமையில் குழு அமைத்து இயங்கிவந்தது. இந்த மருத்துவமனையில், கோவிட் தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்காக, ஆன்ட்டிஜென் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கிடைத்த தகவலின்படி, டாக்டர் காங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு, மே மாதத்தில் மட்டும் சிலமுறை மாற்றியமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை (ICMR) சேர்ந்த விஞ்ஞானியின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவருக்கான பணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒரே இடத்தில் இரு குழுக்கள் ஒரேவிதமான சோதனைகளை அவர்களுக்கே தெரியாமல் நடைபெற்று வந்த நிலையில், டாக்டர் காங்கின் ராஜினாமா நிகழ்ந்துள்ளது.

தான் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், தனது தலைமையிலான குழு கலைக்கப்பட்டு விட்டதாக டாக்டர் காங் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்., இம்மாதம் இறுதியில் இங்கிருந்து வெளியேறிவிடுவேன். தனது வீடு வேலூரில் இருப்பதால், விரைவில் அங்கு செல்ல இருப்பதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டாக்டர் காங்கின் பதவிக்காலம், 2021 ஆகஸ்ட் மாதம் வரை உள்ளதாக மாற்று சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தி்ன மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் சியுலி மித்ரா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் ரோட்டோவைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் டாக்டர் ககன்தீப் காங்கின் பங்கு முக்கியமானது. காலரா, டைபாய்டு உள்ளிட்டவைகளுக்கான தடுப்பு மருந்துகள் அவற்றின் மேம்பாட்டுத்திறன் உள்ளிட்ட ஆராய்ச்சிகளை, டாக்டர் காங் தலைமையிலான குழுவே மேற்கொண்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் காங், உலக சுகாதார நிறுவனம், வெல்கம் டிரஸ்ட், இன்டர்நேசனல் வாக்சின் இன்ஸ்ட்டியூட், இன்டர்நேசனல் சென்டர் ஆப் ஜெனிடிக் இஞ்ஜினியரிங் அண்ட் பயோடெக்னாலஜி உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

டாக்டர் காங், தொற்று நோய்களால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையிலான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பு மற்றும் மேம்படுத்தலை ஊக்குவிக்கும் நார்வே நாட்டை தலைமையிடமாக கொண்ட அமைப்பான Coalition for Epidemic Preparedness Innovations (CEPI) அமைப்பின் துணைத்தலைவராக தற்போது பதவிவகித்து வருவது குறிப்பிடத்தக்கது.