பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை காக்கும் அரணாக அதிமுக அரசு விளங்கும், என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையில், கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில், கிரீமிலேயர் பிரிவினரை நீக்கம் செய்யாமல், 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இட ஒதுக்கீடு சமூக, கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள விஜயபாஸ்கர், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகத்தை விளைவிக்கும் என கருதப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசுப் பணி நியமனங்களில், கிரீமிலேயர் பிரிவினரை முடிவு செய்வதில், சம்பள வருவாய் மற்றும் விவசாய வருவாயை சேர்க்காமல், தற்போதுள்ள நடைமுறையே தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும், என பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிமுக அரசு, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை என்றென்றும் காக்கும் அரணாக விளங்கும் என்றும், அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.