வெள்ளி, 10 ஜூலை, 2020

குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்ட நிதியை ஊராட்சி மன்றங்களுக்கு ஒதுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்' திட்டத்தின் நிதியை ஊராட்சி மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புறங்களில் 'அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்' திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விடும் அ.தி.மு.க. அரசின் முடிவை கண்டிப்பதாக கூறியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைச் சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு, இத்திட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், துறையின் அரசு செயலாளரும் , மாவட்ட ஆட்சித் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்குவது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். 

குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும்' ஜல் சக்தி திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 264 கோடி ரூபாய் நிதியை ஊராட்சி மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அப்படி ஒதுக்கீடு செய்யத் தவறினால் திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Outlook India Photo Gallery - M.K. Stalin