
ஜிஎஸ்டியின் வரி விதிப்பு கட்டமைப்பை முழுவதும் சீரமைக்கும் வரை காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் சிலோடா பகுதியில் அக்கட்சி சார்பில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், உண்மை வெல்லும் பட்சத்தில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என தெரிவித்தார்.
காங்கிரஸ் அளித்த தொடர் நெருக்கடி காரணமாகவே, மத்திய அரசு தற்போது ஜிஎஸ்டி வரியை மாற்றியமைத்து உள்ளது என குறிப்பிட்டார். எனினும், எளிய வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் எனவும் நாடு முழுவதும் ஒரே வரியை அமல்படுத்த வேண்டும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.