
அரசியல் சட்டம் அளிக்காத அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக அரசின் நிர்வாகத்தை ஆளுநர் பன்வாரிலால் மேலும் சிதைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவையில் மேற்கொண்டு வரும் ஆய்வுப் பணிகளை ஆளுநர் உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மாநில சுயாட்சிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்து வரும் தமிழகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ள மத்திய அரசும், ஆளுநரும் போட்டி போட்டுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியல் சட்டப்படி அலங்காரப் பதவியாக திகழும் ஆளுநர் பதவியில் இருப்பவர், அரசின் அதிகாரத்தில் தலையிடுவது, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுக்கு உகந்தது அல்ல என்று சுட்டிக் காட்டியுள்ள ஸ்டாலின், மூத்த அரசியல்வாதியான தமிழக ஆளுநரும் இதனை உணர்ந்து கொள்வார் என அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.