புதன், 22 நவம்பர், 2017

​தொடரும் மரணங்கள்... துரத்தும் கந்துவட்டி... என்ன சொல்கிறது சட்டம்? November 22, 2017

Image
தமிழ்நாட்டில் சமீப மாதங்களில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொள்ளும் துயரம் அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவரது மனைவி (25), மகள்கள் மதி (5) அட்சயா (1) ஆகிய ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தனர். தமிழகத்தையே அதிர்ச்சியில் உறையச்செய்தது இந்த சம்பவம். இந்நிலையில், தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் கந்துவட்டிக் கொடுமைகள் குறித்த புகார்கள் அதிகரித்து வந்தன. தற்போது, சினிமா துறையில் அடுத்த மரணம் நடந்திருக்கிறது. இயக்குநர், நடிகர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக் குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொடுமையான இந்த கந்துவட்டி குறித்து, தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட கந்துவட்டி சட்டம் சொல்வது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
2003ம் ஆண்டு  அதிமுக ஆட்சியில் கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
18% மேல் வட்டி வசூலித்தால் 3 ஆண்டு சிறை, ரூ. 30 ஆயிரம் அபராதம் ஆகும்.
தினசரி வட்டி, நேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் வசூலுக்கு தடை விதிக்கப்பட்டது.

2013 - கந்து வட்டி கொடுமைகள் பற்றி  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வாலுக்கு நீதிபதி கிருபாகரன் கடிதம் எழுதினார்.

கந்து வட்டி கொடுமையை தடுப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்கறிஞர் முத்து குமாரசாமி நியமனம் செய்யப்பட்டார்.

கந்து வட்டி கொடுமையை தடுப்பதற்கான பரிந்துரைகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த பரிந்துரையில், கந்துவட்டி கொடுமைகளை அறிவதற்கு மாவட்டம், தாலுகா அளவில் கண்காணிப்பு குழு அமைக்கவேண்டும், காவல் துறையில் புகார் அளிக்கும் போது அதன் நகலை கண்காணிப்பு குழுவிடம் வழங்க வேண்டும், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை கண்காணிப்பு குழுவிடம் போலீசார் சமர்ப்பிக்க வேண்டும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும், சட்டம் குறித்த தகவல்களை திரையரங்குகளில் ஒளிபரப்ப வேண்டும் போன்ற வழிமுறைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. 

கந்துவட்டி தொழிலை குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.

2014 - கந்துவட்டிகாரர்களை கைது செய்ய கேரளா பின்பற்றிய ஆப்ரேஷன் குபேராவை  பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தினார். ஏனெனில், 2014ம் ஆண்டு கந்துவட்டி விடுபவர்களை கைது செய்ய கேரளாவில் ஆப்ரேஷன் குபேரா திட்டம் அமல்படுத்தப்பட்டு 773 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 1448 பேர் மேல் வழக்கு தொடரப்பட்டது. மேலும், கந்து வட்டி வசூலில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது.

தமிழ்நாட்டில் கடுமையான கந்துவட்டி புகார்கள் அதிகரித்திருக்கும் நிலையில், கேராளவைப் போன்ற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தற்போது கோரிக்கைகள் எழுந்துள்ளன.