போடி அருகே துணை முதல்வர் பங்கு பெற்ற மடிக்கணினி வழங்கும் விழாவில் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்ட பள்ளி நிர்வாகம் மாணவ மாணவியரிடம் 150 ரூபாய் பணம் பெறுவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேனி மாவட்டம் போடி அருகே செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டு கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் 150 ரூபாய் பணம் செலுத்தினால் மட்டுமே இலவச மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டபோது, துணை முதல்வர் பங்கேற்ற விழாவிற்கு அதிக செலவு ஏற்பட்டதால், அதனை ஈடுகட்ட பணம் கேட்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.