வியாழன், 11 ஜனவரி, 2018

பட்டாசு தயாரிப்பின்றி களையிழந்த சிவகாசி! January 11, 2018

Image

பட்டாசு தயாரிப்பால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சிவகாசி களையிழந்துவிட்டது. 17 வது நாளாக நீடித்து வரும் பட்டாசு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தமே அதற்குக் காரணம்.. ஏன் இந்தப் போராட்டம், தொழிலாளர்களின் கோரிக்கை என்ன என இனி பார்ப்போம்.. 

இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு வழக்கில் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 

இதனால் விற்பனை ஏதுமின்றி பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இந்த ஆண்டு வடமாநிலங்களில் இருந்து ஆர்டர் வராத காரணத்தால் பட்டாசு உற்பத்தி முடங்கியுள்ளது. 
இதையடுத்து, சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்களித்து திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி கடந்த மாதம் 26-ம் தேதி முதல், பட்டாசு உற்பத்தியாளர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். 

பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தினமும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பட்டாசு தொழிலாளர்கள் உட்பட 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினரும் களமிறங்கினர். சிவகாசி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் K.K.S.S.R.ராமச்சந்திரன், தங்கம் தென்னராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் MP லிங்கம், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர்  பங்கேற்றனர். 

போராட்டத்தின் 9வது நாளில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக வர்த்தகர்கள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் பட்டாசு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது. 

பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்  தொடர்வதால், பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பட்டாசு விற்பனையாளர்கள், லாரி உரிமையாளர்கள், காகித அட்டை தயாரிப்போர், ரசாயன மூலப் பொருள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட 12 சங்கங்களை சேர்ந்த 4 ஆயிரம் பேர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

வேலை நிறுத்த காலத்தில் பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜனவரி 12 ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் காத்திருப்பு போராட்டம், அலுவலகத்திலேயே 
சமைத்து சாப்பிடும் போராட்டம் நடத்த உள்ளதாக விருதுநகர் மாவட்ட தீப்பெட்டி மற்றும் பாட்டாசு தொழிற்ச்சங்க தலைவர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். 

இதனிடையே பட்டாசுக்கு தடை விதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனின் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். 

பட்டாசு தொழிலாளர்களின் போராட்டம் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. சுற்றுச்சூழல் விதிகளில் பட்டாசுக்கு விலக்கு பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் பேரவையில் தெரிவித்துள்ளார். 

பட்டாசு தொழிலாளர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்து, குட்டி ஜப்பான் மீண்டும் பட்டாசு உற்பத்தியை விறுவிறுப்பாக தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.