போகி புகையால் சென்னையில் 13 மண்டலங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, காற்று மாசு அதிகரித்துள்ளதாக, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து மாசுகட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் போகி பண்டிகைக்கு முந்தைய இருதினங்களில் கந்தக-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் அளவு அனுமதிக்கப்பட்ட தர அளவான 80 மைக்ரோகிராம், கனமீட்டருக்கு குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போகிநாளில் அதிக ஈரப்பதம், குறைந்த வெப்பநிலை மற்றும் காற்றுவேகம் குறைந்ததன் காரணமாக, திருவெற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், உள்ளிட்ட 13 மண்டலங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, காற்று மாசு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவித்துள்ளது.
ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய இரு மண்டலங்களில் மட்டும் கடந்த ஆண்டை காட்டிலும் காற்றின் மாசு குறைந்துள்ளதாகவும் மாசுக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.