புதன், 3 ஜனவரி, 2018

ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர் உடல் கோழிக்கோடு அருகே மீட்பு! January 3, 2018

Image

ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன தூத்துக்குடியை சேர்ந்த கினிஸ்டன் என்ற மீனவரின் உடல் கோழிக்கோடு அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் வீசிய ஒக்கி புயலில் சிக்கி ஏராளமான மீனவர்கள் காணாமல் போயினர். அவர்களில் பலர் மீட்கப்பட்டுள்ள நிலையில், பல மீனவர்கள் சடலமாகவும் கண்டெடுக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த கினிஸ்டன், ஜோசப், ஜூடு, பாரத், ரவிந்திரன் மற்றும் ஜெகன் ஆகிய 6 மீனவர்கள் கன்னியாகுமரி கடலில் தங்கி மீன்பிடித்து வந்த நிலையில், அவர்களது மீன்பிடி படகும் ஒக்கி புயலில் சிக்கி கடலில் மூழ்கியது.

இதில், ஜெகன் மட்டும் உயிரோடு காப்பாற்றப்பட்டார். ஜூடு என்ற மீனவரின் உடல் கேரள கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கோழிகோடு கடற்கரை பகுதியில் ஒதுங்கிய உடல், தூத்துக்குடியை சேர்ந்த கினிஸ்டன் என்ற மீனவரின் உடல் என டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கோழிக்கோடு மருத்துவமனையில் உள்ள கினிஸ்டனின் உடலை பெறுவதற்காக, அவரது உறவினர்கள் கோழிக்கோடு புறப்பட்டு சென்றுள்ளனர்.