source: ns7.tv
கொல்கத்தாவை சேர்ந்த டிஜிட்டல் மீடியா நிறுவனம் ஒன்று, அங்கு பணி புரியும் பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவித்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பெண்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடும் அவதியை ஏற்படுத்துவது மாதவிடாய் காலங்களே. அந்த நாட்களில் பணிக்கு செல்வது அவர்கள் ஏற்கனவே அனுபவிக்கும் துன்பத்தில் கூடுதல் துன்பத்தை ஏற்படுத்துவதுபோன்ற ஒன்று. எனவே, அனைத்து பெண்களும் தங்களது மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை எதிர்பார்ப்பர்.
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, கொல்கத்தாவை சேர்ந்த FlyMyBiz என்கிற டிஜிட்டல் மீடியா நிறுவனம், அங்கு பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுமுறையை அறிவித்திருக்கிறது. நிறுவனம் ஆரம்பித்து 1 வருடமே ஆன நிலையில், அந்நிறுவனத்தின் நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
நிறுவனத்தின் இந்த அறிவிப்பால், அங்கு பணிபுரியும் 12 பெண்கள் மட்டுமல்லாது, ஆண்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி அந்நிறுவனத்தில் தலைமை அதிகாரி சம்யா தத்தாவிடம் கேட்டபோது, பெண்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்ற நோக்குடனே இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவித்தார்.
மும்பையில் இருக்கும் இரண்டு நிறுவனங்களை தொடர்ந்து பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் நிறுவனங்களில், FlyMyBiz நிறுவனம் 3வது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.