
source ns7.tv
புதுச்சேரியில் ஆட்சியாளர்களுக்கிடையேயான மோதல் போக்கினால் பொங்கல் பண்டிகைக்கான இலவச பொருட்கள் முன்கூட்டியே கிடைக்குமா என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்து.
புதுச்சேரி அரசு சார்பில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இலவச பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இரண்டு கிலோ இலவச சர்க்கரையும், பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி உலர் திராட்சை என 250 ரூபாய் மதிப்பிலான பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இலவச சர்க்கரை வழங்குவதற்கு அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து அதற்கான தொகை வங்கிகளில் செலுத்தப்பட்டது. பொங்கலுக்காவது இலவச பொருட்களை முன்கூட்டியே வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், இலவச பொருட்கள் வழங்க நிதி இருந்தும் அதற்கான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க துணைநிலை ஆளுநர் மறுக்கிறார் என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதனை மறுத்துள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பொங்கல் பரிசு வழங்குவதை மாளிகை செயலகம் தடுக்கவில்லை என்றும், தம்மிடம் எந்த கோப்பும் நிலுவையில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பொங்கல் இலவச பொருட்கள் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பொருட்கள் வழங்க அரசு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் துணைநிலை ஆளுநரின் கருத்தால், மஞ்சள் அட்டை வைத்திருப்பவர்கள் பொங்கல் இலவச பொருட்கள் பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை அனைத்து தரப்பினரும் கொண்டாடக்கூடிய பண்டிகை என்பதால், தமிழகத்தை போல் புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பொருட்கள் வழங்க வேண்டும் புதுச்சேரி அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது