புதன், 6 மார்ச், 2019

2,000 ரூபாய் வழங்கும் திட்டம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! March 06, 2019

source ns7.tv
Image
2,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு தடைக்கோரிய வழக்கில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போரின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போரை அடையாளம் காணும் வரை இரண்டாயிரம் ரூபாய் திட்டத்தை அமல்படுத்த பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்குமாறு விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ஏழை மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதை எதிர்க்கவில்லை எனவும், அரசு மேற்கொள்ளும் நடைமுறையை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார். ஏழைத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக கூறி அதிமுகவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார். 
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இச்சிறப்பு நிதி தொழிலாளர்களுக்காகவா? இல்லை பாரபட்சமாக வழங்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதியானது தகுதியானவர்களிடம் இருந்து ஆதார், வங்கி ஆவணங்களை பெற்று பரிசீலனை செய்தபின் வழங்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.