source: ns7.tv
பாகிஸ்தான் வசம் சிக்கியிருந்த இந்திய விமானி அபிநந்தனை வாகா எல்லையில் நேற்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான். ஆயிரக்கணக்கான மக்கள் வாகா எல்லையில் திரண்டு அபிநந்தனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அபிநந்தனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவந்தனர்.
சமூகவலைதளங்களில், அபிநந்தனுக்காக கொட்டிய வாழ்த்து மழையால், #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக், சில மணி நேரம் உலகளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்திலேயே இருந்தது. பல மணி நேர தாமதத்திற்கு பிறகு அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டாலும், இந்தியா பல நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா பின்பற்றவேண்டிய நெறிமுறைகள்:
* இந்தியா பற்றிய ஏதாவது முக்கியமான விஷயங்களை, பாகிஸ்தானிடம் அபிநந்தன் தெரிவித்துவிட்டாரா என்பது குறித்து சோதனை செய்யப்படும்.
* எதிரி நாட்டினர், அபிநந்தனை மூளைச்சலவை செய்துவிட்டார்களா என்பது குறித்து அவரிடம் உளவுத்துறை கேள்வி கேட்டு தெரிந்துகொள்ளும்.
* ரகசியமாக தகவல்களை பெறும் நோக்கில், பாகிஸ்தான் ராணுவத்தினரால், அபிநந்தனின் உடலில் ஏதாவது மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்படும்.
* உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் ராணுவத்தினரால் ஏதாவது துன்பத்திற்கு உள்ளாகி இருக்கிறாரா என்பதை அறிந்துகொள்வதற்காகவும் பல சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் இருந்து தாய் நாடு திரும்பினாலும் அபிநந்தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும் என்றே தெரிகிறது..