சனி, 9 மார்ச், 2019

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுதலை செய்தது யார்? ராகுல் கேள்வி March 09, 2019

Image
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுதலை செய்தது யார்? என்பது குறித்து, மக்களுக்கு பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார், 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்த புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர். அதேபோல 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர் மசூத் அசார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் ஹவேரியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், பாஜக ஆட்சியின்போது, தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல்தான், இந்திய சிறையில் இருந்த மசூத் அசாரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.

இது குறித்து மோடி ஏன்? பேசுவதில்லை எனவும் ராகுல் கேள்வி எழுப்பினார். மேலும், மோடியை போல் தீவிரவாதிகளை கண்டு, காங்கிரஸ் அடிபணிவதில்லை என்றும் ராகுல் குறிப்பிட்டார். தோக்லாமில் சீனா ஊடுருவியபோது உங்கள் அரசு என்ன செய்து கொண்டிருந்தது ?எனவும் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.

source: ns7.tv
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/9/3/2019/pulvama